கிரிக்கெட் - 36-லிருந்து 329, வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெற்ற இந்தியா

19 Jan 2021

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வரும் நவம்பர் மாதம் மூன்று ஒரு நாள் போட்டிகள், மூன்று டி 20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

முதலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டித் தொடரை 1 - 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அடுத்து நடைபெற்ற டி 20 போட்டித் தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்றது. பின்னர் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற கணக்கில் வென்று மகத்தான வெற்றியைப் பெற்றது.

இன்றுடன் முடிந்த கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றிக்குத் தேவையான 328 ரன்களை 7 விக்கெட்டுகளை இழந்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

இளம் வீரரான ரிஷாப் பந்த் அருமையாக விளையாடி ஆட்டமிழக்காமல் 89 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு முன்னதாக சுப்மான் கில் 91 ரன்களும், புஜாரா 56 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

கவாஸ்கர் - பார்டர் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணியை பல்வேறு நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமாக ஆடியது. அந்தடெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா மூன்றே நாட்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அன்றைய தினம் இந்திய கிரிக்கெட் அணியையும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் வசை பாடிய பலரும் இன்று வாழ்த்துப் பாடி வருகிறார்கள்.

அந்த டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்சில் மொத்தமாக 50 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் திணறிய இந்திய அணி வீழ்ச்சி அடைந்தாலும் அதை மனதில் நிறுத்திக்கொள்ளாமல் அடுத்து நடைபெற்ற மூன்று டெஸ்ட்டுகளிலும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி எழுச்சி பெற்றது.

பல வீரர்கள் காயமடைந்த காரணத்தால் கடைசி டெஸ்ட்டில் விளையாட தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், சுழற்பந்து வீச்சாளர் முதல் முறையாக சேர்க்கப்பட்டனர். அவர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்ததற்கு தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய ரசிகர்களும் வாழ்த்தி வருகிறார்கள்.

மிகப் பெரும் அனுபவத்தைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே அனுபமில்லாத இளம் இந்திய அணியைக் கொண்டு வெற்றி பெற்றது ஒரு வரலாற்றுச் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

Tags: cricket, india, australia,

Share via:

Movies Released On July 27