ஜீ தமிழ் - புத்தம் புதிய தொடர் ‘நினைத்தாலே இனிக்கும்’
19 Aug 2021
ஜீ தமிழ் டிவியில் வரும் ஆகஸ்ட் 23, திங்கள் முதல் இரவு 7.30 மணிக்கு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
சுய தொழில் முனைவோராக வேண்டும் என்ற தனது இலட்சியத்தை அடைய உழைக்கும் ஒரு இளம் பெண்ணின் கதையை புதிய பரிமாணத்தில் சொல்ல இருக்கிறது இத்தொடர்.
தென் இந்திய இனிப்பு பலகாரமான அதிரசத்தினை அசத்தலாக செய்வதில் கை தேர்ந்த, சமையல் கலை வல்லுனரான இளம் பெண் பொம்மி. மகிழ்ச்சியாக துறுதுறுவென சுயமாக இனிப்பு தொழில் செய்து தன் வாழ்வினை ரசித்து வாழ்கிறாள்.
ஆத்மார்த்தமான ஒரு சமையல் கலைஞரான பொம்மி, தினமும் சென்னையின் தெருக்களில் தனது இருசக்கர வாகனத்தில் வலம் வந்து அதிரசம் விற்று, தனது இனிப்பு வியாபாரத்தை வளர்க்க முயன்று வருகிறாள். எதிர்காலத்தில் சொந்தமாக ஒரு பெரிய இனிப்பகத்தினை துவங்க வேண்டும் என்கிற அவளது தந்தையின் கனவை நனவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு உழைத்து வருகிறாள்.
தான் சந்திக்கும் மனிதர்களை புன்னகைக்க வைத்து மகிழும் ஒரு எளிமையான பெண்ணாக இருந்தாலும், புத்திசாலியான பொம்மி, ஒரு மகளாக தனது பயணத்தைத் துவங்கி, சுய தொழில் முனைபவராக வாழ்க்கையில் முன்னேறும் கதையே ‘நினைத்தாலே இனிக்கும்’.
கதாநாயகி ‘பொம்மி’ கதாபாத்திரத்தில் புதுமுகம் சுவாதியும், கதாநாயகனாக ‘சித்தார்த்’ கதாப்பாத்திரத்தில் ஆனந்த் செல்வமும் நடிக்கிறார்கள்.
ஒருபுறம், தனது கனவினை நனவாக்குவதற்கு சராசரி பெண்ணான பொம்மி கடினமாக உழைக்க, மறுபுறம் ஒரு செல்வந்தர் வீட்டில் பிறந்த சித்தார்த் தனது படிப்பிற்கேற்ற பணியில் சிறந்து விளங்க விரும்புவதாக கதை நகர்கிறது. சில ஒற்றுமையான விஷயங்களால் அவர்கள் சந்திக்க நேர்ந்தாலும், அவர்களது நேரெதிர் குணாதிசயங்கள் தொடரின் நேயர்களுக்கு சுவாரசியமான அனுபவத்தினை வழங்கும்.
இத் தொடரின் துவக்கத்தினை முன்னிட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகஸ்ட் 23-ம் தேதியை, 'ஸ்வீட் டே' என்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாட உள்ளது.
பொம்மியின் இனிமையை ரசிகர்களுக்கு காண்பிக்கும் நோக்கில், இத் தொடரின் கோலாகல ஆரம்பத்தினை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இனிப்பகங்களுடன் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு மாபெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ளது.
புதிய தொடர் குறித்து பேசிய ஜீ தமிழ் டிவியின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தென்னிந்திய குழுமத் தலைவர் சிஜூ பிரபாகரன் பேசுகையில்,
“சமுதாயத்தின் அனைத்து தரப்பிலிருக்கும் நேயர்களின் விருப்பத்திற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவதே எங்களது ஒரே நோக்கமாகும். அந்த அடிப்படையில் உருவான எங்கள் படைப்பான ‘நினைத்தாலே இனிக்கும்’ தொடரை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இளம் பெண்கள் தங்கள் வாழ்வில் புதிய இலக்குகளை எட்டவும், தங்கள் கனவுகளை சாதிக்கவும் அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை வழங்குவதற்காகவே ஜீ தமிழ் இந்த புத்தம் புதிய தொடரை ஒளிபரப்ப உள்ளது.
வலுவான கதை, புதுமுகங்கள் மற்றும் குடும்பங்களில் நிகழும் யதார்த்தமான நிகழ்வுகள் என பல அம்சங்களுடன் வரும் இத்தொடர், நிச்சயமாக எங்கள் நேயர்களுக்கு இனிமை கலந்த ஒரு அனுபவத்தினை வழங்கும் என்று நம்புகிறோம்”, என்கிறார்.
Tags: zee tamil, zee tamil tv, ஜீ தமிழ், ஜீ தமிழ் டிவி, ninaithaley inikkum, நினைத்தாலே இனிக்கும்