விமர்சனங்களுக்கு யுவன் பதிலடி
26 Aug 2024
இணையத்தில் எழுந்த விமர்சனங்களுக்கு யுவன் பதிலடி கொடுத்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி செளத்ரி, மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோட்’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இதுவரை வெளியான பாடல்களுக்கு கடுமையான விமர்சனம் இணையத்தில் எழுந்தது.
இதற்கு இயக்குநர் வெங்கட்பிரபு, படத்தில் வரும் போது அனைத்து விமர்சனங்களும் சரியாகிவிடும் என்று பதிலளித்திருந்தார். ஆனால், இந்த விமர்சனங்கள் குறித்து யுவன் எந்தவொரு பதிலுமே அளிக்காமல் இருந்தார்.
தற்போது பள்ளி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் யுவன். அப்போது விமர்சனங்கள் குறித்து தனது பேச்சில் குறிப்பிட்டார். அதில் யுவன் கூறியிருப்பதாவது:
“ஆரம்ப காலத்தில் இசையமைத்த படங்களின் தோல்வியால், என்னை அனைவரும் தோல்வியடைந்த இசையமைப்பாளர் என முத்திரை குத்தினார்கள். அதற்காக தனியாக அழுதியிருக்கிறேன். சில நாட்களுக்கு பின் இசையில் முழுமையாக அதிக கவனம் செலுத்த தொடங்கினேன். அதனால் இப்போது உங்கள் முன் நிற்கிறேன்.
பேசும் வாய் பேசிக்கொண்டே தான் இருக்கும். நாம் அதை கடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. வெறுப்பவர்கள் உங்களை கீழே இழுக்க முயற்சிப்பார்கள். ஆனால், நாம் எப்போதும் தலை நிமிர்ந்து பயணிக்க வேண்டும்.
எனது காதுகள் எப்போதுமே எதிர்மறை விமர்சனங்களுக்கு மூடியிருக்கும். இசை மற்றும் நேர்மறை விமர்சனங்களுக்கு திறந்திருக்கும்”
இவ்வாறு யுவன் தெரிவித்துள்ளார்.
Tags: yuvan