அதிக மன உளைச்சலில் எடுத்த படம் ’வாழை’: மாரி செல்வராஜ்

26 Aug 2024

திரையுலக வாழ்வில் அதிக மன உளைச்சலில் எடுத்த படம் ’வாழை’ என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல்வேறு புதுமுகங்கள் ஆகியோரை கொண்டு மாரி செல்வராஜ் இயக்கிய படம் ‘வாழை’. முதலில் ஓடிடி வெளியீடு என்று திட்டமிட்டு இப்போது திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பாலா, ஷங்கர் தொடங்கி பல்வேறு இயக்குநர்கள் ‘வாழை’ படத்தினை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளனர்.

மக்கள் மத்தியில் ‘வாழை’ படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசூலிலும் வரவேற்உ கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசும் போது ‘வாழை’ படம் குறித்தும், அவருடைய அப்பா, அம்மா நினைப்பது குறித்தும் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

அந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் பேசியிருப்பதாவது:

“’வாழை’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை படமாக்கும் போது 10 நாட்களாக தூங்கவே இல்லை. மருத்துவமனையில் எல்லாம் இருந்தேன். அந்தக் காட்சிகளை படமாக்கும் போது மீண்டும் எனது பழைய வாழ்க்கைக்கு சென்றுவிட்டேன்.

எனது திரையுலக வாழ்வில் அதிக மன உளைச்சலில் எடுத்த படம் ’வாழை’ தான். அப்பா, அம்மா எல்லாம் ஏன் இதை படமாக்குறாய் என்று திட்டினார்கள். சினிமா என்றால் ஜாலியாக எடுப்பது என நினைத்தார்கள். இவன் மட்டும் ஏன் நாம் பட்ட கஷ்டம், வேதனையை எடுக்கிறான் என்றும் எண்ணினார்கள். இப்போது கூட எனது அப்பா, அம்மா அழுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சினிமா நிரந்திரமான வேலை கிடையாது என்று தெரியும்.

“அண்ணன் அரசாங்க வேலையில் இருக்கிறான். சாகும் வரை வேலை செய்வான். இப்போது கூட கெட்டுப் போகவில்லை, ஏதாவது படிச்சு வேலைக்கு போயிடு” என்பார்கள். அவர்களுக்கு சினிமா மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை. அதிகமான பணம் கொடுக்கும் போது அவர்களுக்கு பயம் இன்னும் அதிமாகிறது.

இந்த வாழ்க்கைக்கு பழகிவிட்டான் என்றால் இவன் என்ன ஆவான் என நினைக்கிறார்கள். இந்த பணத்துக்காக தூங்காமல், மன அழுத்தத்துடன் முன்பு கஷ்டப்பட்டதை விட அதிகமாக கஷ்டப்படுகிறான் என்ற புரிதல் அவர்களுக்கு வந்துள்ளது.”

இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Tags: mari selvaraj

Share via: