200 கோடி வசூல் பேச்சால் உருவான சர்ச்சை: விஜய் தேவரகொண்டா விளக்கம்

03 Apr 2024

200 கோடி வசூல் தொடர்பான பேச்சால் உருவான சர்ச்சைக்கு விஜய் தேவரகொண்டா விளக்கம் கொடுத்துள்ளார்.

பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘தி பேமிலி ஸ்டார்’. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நேற்று (ஏப்ரல் 2) நடைபெற்றது. இந்த விழாவில் ‘லைகர்’ வெளியீட்டின் போது பேசிய பேச்சுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

‘லைகர்’ படத்தினை நேரடி ஓடிடி வெளியீட்டுக்கு பல்வேறு நிறுவனங்கள் பெரும் தொகை வழங்க முன்வந்தன. ஆனால், படக்குழுவினர் திரையரங்கில் வெளியீடு என்று முடிவு செய்தனர்.

மேலும், விஜய் தேவரகொண்டா பேசும் போது, இந்தப் படம் திரையரங்கில் 200 கோடி வசூல் செய்யும் என்று நம்பிக்கையுடன் பேசியிருந்தார். ‘லைகர்’ படம் படுதோல்வியை தழுவியது. இந்தப் பேச்சுக்கு கடும் கிண்டலுக்கு ஆளானார் விஜய் தேவரகொண்டா.

இந்தப் பேச்சு தொடர்பாக ‘தி பேமிலி ஸ்டார்’ விழாவில் விஜய் தேவரகொண்டா பேசும் போது குறிப்பிட்டதாவது:

“’பெல்லி சூப்புலு’ வெளியான காலத்தில் எனது படங்கள் 100 கோடி வசூல் செய்ய வேண்டும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தேன். அது 4-வது படத்தின் மூலம் அடைந்தேன். ‘கீத கோவிந்தம்’ படத்தின் மூலம் திரையுலக வாழ்க்கையில் பெரிய இடம் கிடைத்தது.

அதே மாதிரி ஒரு படம் பண்ணுங்கள் என்று பலரும் கேட்கத் தொடங்கினார்கள். அந்தப் படம் மக்கள் மத்தியில் உருவாக்கிய தாக்கம் அற்புதமானது. ஆனால், அதை விட அற்புதமான படத்தை என்னால் கொடுக்க முடியவில்லை.

அந்தச் சமயத்தில் தான் 200 கோடி வசூல் செய்யும் படத்தைக் கொடுப்பேன் என்று அறிக்கை கொடுத்தேன். ஆனால், அது நடக்காத போது பலரும் ஏன் அப்படியொரு அறிக்கை கொடுத்தாய் என்று கேட்டார்கள்.

திமிர் பிடித்தவன் எனவும் சொன்னார்கள். அவ்வளவு துணிச்சலாக ஒரு அறிக்கை கொடுத்துவிட்டு, அது நடக்கவில்லை என்பது தவறு. ஒரு நாள் நிச்சயம் 200 கோடி வசூல் செய்யும் படத்தைக் கொடுப்பேன். அதுவரை மக்களின் கோபத்தை எதிர்கொள்ள தயார். அதற்குக் காரணம் என் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை”

 

இவ்வாறு விஜய் தேவரகொண்டா பேசியிருக்கிறார்

Tags: vijay devarkonda, family man

Share via: