பிறந்தநாள் கொண்டாட்டம் - முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்

21 Jun 2024

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்தான் போட்டியிடுவேன் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

இருந்தாலும் கடந்த சில வாரங்களாக வாழ்த்துகளை மட்டுமே தெரிவித்து வந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராம் அருந்தியதால் பலர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற நேற்று கள்ளக்குறிச்சி சென்றிருந்தார்.

இந்நிலையில் அவருடைய தவெக கட்சியின் செயலாளரான ஆனந்த், எக்ஸ் தளத்தில் “பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிக்ச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்,” என்று அறிவித்தார்.

ஆனால், விஜய் நடித்து வெளியாக உள்ள ‘தி கோட்’ படத்தின் அப்டேட்டுகளை அதன்பின் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று சொன்ன கட்சியின் செயலாளர் ஆனந்த், கட்சியின் தலைவர் விஜய் ஆகியோர் அந்த அப்டேட்டுகளையும் அவர்களது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

நாளை ஜுன் 22 விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘தி கோட்’ படத்தின் டீசர் ஒன்றையும் நள்ளிரவு 12:01 மணிக்கு வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் கள்ளக்குறிச்சி சம்பவளத்திற்காக பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் வெளியாகப் போகும் படத்தை வைத்து பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவுக்கு ஒரு பேச்சு, அரசியலுக்கு ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுவதால் விஜய்யும் முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Tags: vijay, the goat, விஜய்

Share via: