'வேட்டையன்' படக்குழுவினருக்கு தயாரிப்பு நிறுவனம் கட்டளை
21 Jun 2024
ரஜினி நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன.
தற்போது படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் படத்தின் இயக்குநர் ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத்தை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள், ட்ரெய்லர் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் விளக்கியுள்ளார்.
மேலும், அக்டோபர் 10-ம் தேதி வெளியீட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று படக்குழுவினருக்கு தயாரிப்பு நிறுவனம் கெடுபடியாக தெரிவித்துவிட்டது. ஏனென்றால், ரஜினி இல்லாத காட்சிகள் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 20-ம் தேதி தங்களுக்கு படத்தின் இறுதிவடிவம் வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை மனதில் கொண்டு படத்தின் இறுதிகட்டப் பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.
Tags: vettaiyan, rajinikanth