‘வேட்டையன்’ போட்டியாக ’கங்குவா’: பின்னணியில் நடந்தது என்ன?

28 Jun 2024

தசரா விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு ‘வேட்டையன்’ படத்துக்குப் போட்டியாக களமிறங்குகிறது ‘கங்குவா’.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் முன்பே அறிவித்துவிட்டார்கள். விரைவில் ரஜினி இல்லாத காட்சிகளின் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதனிடையே, சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், பென் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது. ஆனால், இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

இதனிடையே, தீபாவளிக்கு ‘விடாமுயற்சி’ வருவது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் விநியோகஸ்தர்களிடம் தீபாவளி வெளியீடு என்பதை உறுதி செய்து வைத்தது ‘கங்குவா’ படக்குழு. ஆனால், ‘விடாமுயற்சி’ படமோ தீபாவளிக்கு வருவது உறுதி என்று கூறிவிட்டது. ‘கங்குவா’ படக்குழுவோ எந்தப் படம் வந்தாலும் உடன் வரலாம் என்று திட்டமிட்டது.

திடீரென்று, தசரா விடுமுறையை கணக்கில் கொண்டு அக்டோபர் 10-ம் தேதி ‘கங்குவா’ வெளியீடு என்று அறிவித்தது படக்குழு. இது பலருக்கு ஆச்சரியம் அளித்தது. இது குறித்து விசாரித்த போது, “தீபாவளி வெளியீடு என்று இருந்தது உண்மை தான். 

ஆனால், இதர மொழி விநியோகஸ்தர்களிடம் ஞானவேல்ராஜா பேசினார். அவர்கள் அனைவருமே தசரா விடுமுறை தான் சரியாக இருக்கும். பெரிய முதலீடு இருப்பதால், 4 நாட்கள் விடுமுறை வசூலை எடுத்துவிடலாம் என தெரிவித்தார்கள். அதை வைத்து தமிழக விநியோகஸ்தர்களிடம் பேசினார், அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்” என்று தெரிவித்தார்கள்.

Tags: vettaiyan, kanguva, rajinikanth, suriya

Share via: