‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் எப்போது? – தயாரிப்பாளர் பதில்
30 Jun 2024
‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் எப்போது வெளியாகும் என்பதற்கு தயாரிப்பாளர் அஸ்வினி தத் பதிலளித்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கல்கி 2898 ஏடி’. பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வசூலை குவித்து வருகிறது. 2 நாட்களில் 298 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த வெற்றியினை விரைவில் பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும், படத்தின் 2-ம் பாகம் எப்போது என்ற தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் அஸ்வினி தத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
“’கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்துக்கான 60% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் இதர காட்சிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம். அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைந்தவுடன், வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்படும்.
மும்பை, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு என அனைத்து மாநிலங்களிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வினுக்கு முதலில் நன்றி கூற வேண்டும். கமல்ஹாசன் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு தான், இரண்டாம் பாகம் பண்ணும் முடிவையே எடுத்தோம். அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும்.
இப்போதைக்கு ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் மட்டுமே திட்டம் உள்ளது. அடுத்த பாகங்கள் குறித்து நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக தயாரிப்போம்”
இவ்வாறு அஸ்வினி தத் தெரிவித்துள்ளார்.
