தொடர் தோல்வி: அலுவலகத்தினை விற்ற தயாரிப்பாளர்

24 Jun 2024

தொடர் தோல்வியால், தனது ஏழு மாடி அலுவலகத்தினை விற்றுள்ளார் தயாரிப்பாளர் வாசு பாஹ்னானி.

இந்தி திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது பூஜா எண்டர்டெயின்மெண்ட். இந்த நிறுவனம் கூலி நம்பர் 1, ஹீரோ நம்பர் 1 உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை தயாரித்துள்ளது. 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது வரை சுமார் 35-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது.

சமீபமாக பூஜா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த ‘பெல் பாட்டம்’, ‘மிஷன் ராணிகன்ஞ்’, ‘கண்பத்’ மற்றும் ‘படே மியான் சோட்டே மியான்’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. அதிலும் 350 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட ‘படே மியான் சோட்டே மியான்’ திரைப்படம் சுமார் 150 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது பூஜா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

தற்போது மும்பையில் உள்ள அந்நிறுவனத்தின் 7 மாடி அலுவலகத்தினை விற்றுவிட்டது. மேலும், தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 80% பேரை பணியில் இருந்து நீக்கிவிட்டது. அந்த ஊழியர்களுக்கான பணத்தையும் கொடுத்துவிட்டது. முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவினால் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

தற்போது மும்பையில் ஜுகுவில் இரண்டு மாடி குடியியிருப்பில் தங்களுடைய அலுவலகத்தினை மாற்றிவிட்டது பூஜா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். தங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்காக பல்வேறு இயக்குநர்கள், நடிகர்களிடம் பேச்சுவார்த்தையையும் தொடங்கி இருக்கிறது.

பூஜா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் வாசு  பாஹ்னானியின் மகன் ஜாக்கி பாஹ்னானியைத் தான் ரகுல் ப்ரீத் சிங் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via:

Movies Released On July 15