‘தக் லைஃப்’ படத்தில் ஏற்பட்ட சிக்கல் என்ன?

22 Apr 2024

‘தக் லைஃப்’ படத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன என்பது தெரியவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா, கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து இந்தப் படத்தினை தயாரித்து வருகிறது.

இந்தப் படம் தொடங்கப்பட்டதில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவருமே விலகிவிட்டார்கள். மணிரத்னம் படம் என்றாலே மிகவும் திட்டமிட்டு நடைபெறும். ஆனால், இந்தப் படத்தில் அப்படியில்லையே என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இது குறித்து விசாரித்த போது, ‘தக் லைஃப்’ படத்தினைப் பொறுத்தவரை கமலின் தேதிகளை முன்வைத்தே இதர நடிகர்களின் தேதிகள் வாங்கப்பட்டு வருகிறது. அப்படித்தான் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவியிடமும் தேதிகள் வாங்கியிருக்கிறார்கள். அவ்வாறு வாங்கப்பட்ட தேதிகளையே பலமுறை வேண்டாம் என திருப்பிக் கொடுத்துள்ளார்கள்.

இது தொடர்ந்ததால் இருவருமே விலகிவிட்டார்கள். ஏனென்றால் இதர படங்களின் படப்பிடிப்பு ‘தக் லைஃப்’ தேதிகளால் குழப்பமாகிறது என்பதே இதற்கு காரணம். தற்போது துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு நடித்து வருகிறார். ஜெயம் ரவிக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.

Tags: thug life, mani ratnam, kamal haasan

Share via:

Movies Released On March 15