தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்களுக்காக வசூலான 6 கோடி

31 Mar 2020

கொரானோ வைரஸ், பலரது உழைப்புகளையும் ஓய்வெடுக்க வைத்துவிட்டது. நம் நாட்டில் தினசரி வேலைக்குச் சென்று உழைத்து, பணம் சம்பாதித்து, தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள்தான் அதிகம்.

சினிமாவில் பெப்ஸி என்ற தொழிலாளர் அமைப்பில் 24 தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு படப்பிடிப்பு நடந்தால் மட்டும்தான் வருமானம்.

எனவே, பெப்ஸி தொழிலாளர் அமைப்பு திரையுலகத்தினரிடம் நிவாரண உதவிகளைக் கேட்டது. முதலில் சூர்யா 10 லட்சம் உதவி தருவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் 10 லட்சம், ரஜினிகாந்த் 50 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம், உதயநிதி ஸ்டாலின் 10 லட்சம் வழங்கினர். இவைதான் அதிகபட்சத் தொகை. மற்ற சில சிறிய நடிகர்கள், சில தயாரிப்பாளர்கள் அரிசி, நிதியுதவி என வழங்கினர்.

தெலுங்குத் திரையுலகத்தில் தொழிலாளர்களுக்கு என தனி அமைப்பு உள்ளது. அவர்களுக்காக நிதியுதவியை வசூலிக்கும் பொறுப்பை நடிகர் சிரஞ்சீவி ஏற்றுக் கொண்டார். அதற்காக ‘#CoronaCrisisCharity’ என நிதி திரட்டவும் ஆரம்பித்தார். இதுவரையில் 6.2 கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார் சிரஞ்சீவி. மேலும் பலரும் உதவி செய்ய வங்கிக் கணக்கை அறிவித்துள்ளார். 

தமிழ் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பெப்ஸி அமைப்பில் இதுவரையில் வசூலான தொகை 1 கோடியைக் கூட தாண்டவில்லை. 

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்டவர்கள் இதுவரையிலும் எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. 

மக்களுக்காக உதவி செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை, தாங்கள் சார்ந்த சினிமா தொழிலாளர்களுக்குக் கூட உதவ முன் வரமாட்டார்களா ?

Tags: corono, covid 19, tamil cinema, telugucinema

Share via: