கொரனோ இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர்கள் ஏப்ரல் மாதக் கடைசியில் மூடப்பட்டன. ஏப்ரல் 23ம் தேதி வெளியான படங்கள் சில நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் ஓடின. ஏப்ரல் 26ம் தேதியிலிருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன.

சுமார் நான்கு மாத காலங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களைத் திறக்க தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை மறுதினம் திங்கள் கிழமை, ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை முதல் திறக்கப்படும் என்று அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அன்று முதல் என்னென்ன படங்களைத் திரையிடலாம் என்ற பேச்சில் தியேட்டர்காரர்கள் இறங்கிவிட்டார்கள்.

ஏப்ரல் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்ட போது ஓடிக் கொண்டிருந்த ‘கர்ணன், சுல்தான்’ ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிவிட்டன. அதனால், வேற்று மொழிப் படங்கள்தான் திங்கள் கிழமை திறக்கப்படும் தியேட்டர்களில் அதிகமாகத் திரையிடப்படும் எனத் தெரிகிறது.

தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் ஏற்கெனவே சில புதிய படங்களை வெளியிடுவதற்கான வேலைகளை அதன் தயாரிப்பாளர்கள் ஆரம்பித்திருந்தனர். அடுத்த வார வெள்ளிக்கிழமை 27ம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது.