பைரசி குற்றங்களைக் காட்டும் ‘தமிழ் ராக்கர்ஸ்’
10 Aug 2022
உலகளவில் ‘உள்ளடக்கத்தின் சட்டவிரோத நகல்’ என்பது கலை உலகில் மிகப் பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது முடிவில்லா போர் ஒன்றை கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர்.
முதல் முறையாக இந்தத் தலைப்பில் ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக உருவாகியுள்ள தொடர்தான் ‘தமிழ் ராக்கர்ஸ்’.
தமிழில் முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான சோனி லிவ் ஓடிடி தளத்தில், அடுத்த தமிழ் வெப் தொடராக ‘தமிழ் ராக்கர்ஸ்’ தொடர் வெளியாக உள்ளது.
‘ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகஸ்ட் 19 முதல் சோனி லிவ் தளத்தில் வெளியாக உள்ளது.
நாட்டின் மிகவும் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் இத்தொடர் மூலம் ஓடிடி தளத் தயாரிப்புகளில் இறங்கியுள்ளது.
மனோஜ்குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத்தின் எழுத்தில் உருவான இந்தத் தொடரில், அருண் விஜய், அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன், தருண் குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், ருத்ரா என்ற ஒரு காவல் அதிகாரியின் பயனம் மூலமாக விவரிக்கப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கிறார். காலம் கடந்து அடங்க மறுக்கும் ரசிகர்கள் மற்றும் மிகவும் ஆபத்தான ஆற்றல் மிக்க இணைய தள திருடர்கள் மீது போர் தொடுப்பவனாக ருத்தரா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத் தொடர் பற்றி ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருணா குகன் பேசுகையில்,
தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதைக் களத்தைக் கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுதான் இதன் கதையை உரவாக்கினோம். இதன் மூலம், கலைத் துறையினர் படும் இன்னல்களை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாகக் காட்டி உள்ளோம். சோனி லிவ் நிறுவனத்தினை ஒளிபரப்பு பங்குதாரராகக் கொண்டது எங்களுக்கு மேலும் பலத்தினைக் கூட்டியுள்ளது. தொலைநோக்கு சிந்தனை உள்ள இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினைத் தந்ததுடன் மட்டும் அல்லாமல், மக்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான ஒரு பந்தத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் அறிவழகன் பேசுகையில்,
பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்விப்பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்குத் தெரியாது. அருண் விஜய்யின் ருத்ரா கதாபாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு இந்த தமிழ் ராக்கர்ஸ் தொடர் அழைத்துச் செல்லும்.
நடிகர் அருண் விஜய் பேசுகையில்,
இந்தத் தொடரின் பகுதியாக இருப்பது ஒரு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்குத் தேவைப்படும் தொடராக இதனைப் பார்க்கிறேன். திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்குக் கொண்டு வருகிறான் என்பதே கதை. நான் மிகவும் ஆவலுடன் இந்தத் தொடரை சோனி லிவ்வில் காண்பதற்குக் காத்திருக்கிறேன். திரைத் துறையில் அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
Tags: tamil rockers, arivazhagan, arun vijay, aishwarya menon, vano bojan

