ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘சூரரைப் போற்று’

12 Jul 2021

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சூரரைப் போற்று’.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்  வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு 'சூரரைப் போற்று' படம் உருவாக்கப்பட்டிருந்தது. 

78வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில் பத்து இந்திய மொழி திரைப்படங்கள் மட்டும் திரையிடப்பட்டன. அதில் சூரரைப் போற்று திரைப்படமும் ஒன்று. மேலும் 93வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கான போட்டியிலும் 'சூரரைப் போற்று' திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெருமை வாய்ந்த 'சூரரைப் போற்று' திரைப்படம், பிரம்மாண்டத் தயாரிப்பாக இந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க, நடிப்பில் தேர்ந்த பிரபலமான நடிகர் நடிகையர் நடிக்க இருக்கிறார்கள். 

‘சூரரைப் போற்று’ இந்தி திரைப்படத்தை சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன் தலைமையிலான 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தி ரீமேக் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில், 

"சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்தக் கதையை நான் கேட்டது முதலே இது தென்னக ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அந்தக் கதையில் ஜீவன் அத்தகைய வலிமை வாய்ந்ததாக இருந்தது.

உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில் தயாரிப்பதும், தரமான படங்களைத் தொடர்ந்து தந்து வரும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார்.

இந்த படத்தின் நிஜ, நாயகரான கேப்டன், ஜி.ஆர்.கோபிநாத் கூறுகையில்,

"படத்தின் இயக்குநர் சுதா ‘என் கதையைச் சொல்ல வேண்டும்' என்று என்னை அணுகிய போது நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை எப்படிச் செய்யவேண்டும் என்று அவருக்கு இருந்த அக்கறையும், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணமும் என்னை ஒப்புக்கொள்ள வைத்தன. 

சிறுநகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தங்கள் கனவுகளைத் துரத்த குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை தந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு பெரு மகிழ்ச்சியை தந்தது. தற்போது இந்தி ரீமேக்கையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்,"என்றார்.

அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விக்ரம் மல்ஹோத்ரா பேசுகையில்,

“மக்களிடம் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மீது எங்களுக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு ஏதாவது தர வேண்டும் என்பதையே எங்கள் நிறுவன திரைப்படங்கள் எப்போதும் முயற்சித்து வருகின்றன. 

'சூரரைப் போற்று' திரைப்படம் நிகழ்த்தியுள்ள மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களுக்கும் கொண்டு செல்வதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. குறிப்பாக, சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் ஆகியோருடன் இணைவது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது. இதுபோன்ற உயர்தரமான படைப்புகளை தொடர்ந்து தந்து ரசிகர்களை மகிழ்விப்போம் என்று நம்புகிறேன். 

இயக்குநர் சுதாவை இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக நாங்கள் மதிப்பிடுகிறோம். அவருடன் பணியாற்றுவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தக் கதையை உலகம் முழுதும் இருக்கும் ரசிகர்களுக்கு அவர் எப்போது தருவார் என்பதைப் பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.

- Vetrivel

Tags: soorarai potru, Sudha Kongara, sooriya, Aparna Balamurali, GV Prakash Kumar

Share via: