மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – எஸ்.ஜே.சூர்யா

26 Jun 2024

சிபி சக்கரவர்த்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டான்’. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சிபி சக்கரவர்த்தி. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

‘டான்’ படத்துக்குப் பிறகு, சிபி சக்கரவர்த்தி பல்வேறு நாயகர்களை சந்தித்து கதைகள் கூறிவந்தார். ஆனால், எதுவுமே ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை. இறுதியாக சிவகார்த்திகேயனை சந்தித்து கதையொன்றை கூறினார். அதில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்தார்.

இந்தப் படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்து, ஒப்பந்தமும் கையெழுத்தானது. நாயகியாக ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளராக அனிருத் என ஒவ்வொருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘டான்’ படத்தில் சிபி சக்கரவர்த்தி – சிவகார்த்திகேயன் – எஸ்.ஜே.சூர்யா மூவரும் இணைந்து பணிபுரிந்திருந்தார்கள். தற்போது இதிலும் மூவரும் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளார்கள். இந்தாண்டிற்குள் பெரும்பாலான பகுதி படப்பிடிப்பினை முடிக்க தகுந்தாற் போல் நடிகர்களின் தேதிகளை படக்குழுவினர் வாங்கியிருக்கிறார்கள்.

Tags: sivakarthikeyan, sj suryah

Share via: