சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் படம்
28 Sep 2024
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
'குட்நைட்', 'லவ்வர்' போன்ற ஃபீல் குட் திரைப்படங்களை தயாரித்து தமிழ் திரைப்பட உலகில் தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடத்திலும் நன்மதிப்பை பெற்றிருக்கும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய திரைப்படத்தினை தயாரிக்கிறது என்பதும், ஹாட்ரிக் வெற்றியை வழங்கிய நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார் என்பதினாலும், படம் தொடர்பான அறிமுக அறிவிப்பு வெளியானதும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: sasikumar, simran, production number 5, million doller studios