’சிங்கம் 4’ உருவாகுமா? – ஹரி விளக்கம்

13 Apr 2024

‘சிங்கம் 4’ உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் ஹரி பதிலளித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சிங்கம்’. 3 பாகங்கள் வெளியாகி அனைத்துமே பெரும் வரவேற்பு பெற்றன. இதனால் 4-வது பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருந்தது.

தற்போது விஷாலை வைத்து ‘ரத்னம்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் ஹரி. இதனை விளம்பரப்படுத்தும் பேட்டியொன்றில் ‘சிங்கம் 4’ எப்போது என்ற கேள்விக்கு இயக்குநர் ஹரி கூறியிருப்பதாவது:

‘சிங்கம் 4’ எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், இன்னொரு போலீஸ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ‘ரத்னம்’ வெளியான உடன் போலீஸ் கதை விவாதத்தில் முழுமையாக ஈடுபடுவேன். அது ’சிங்கம் 4’ ஆக இருக்குமா என்று தெரியவில்லை.

ஏனென்றால் 3-க்கு பிறகு 4-வது என்பது எப்படியிருக்கும் என்பது கணிக்க முடியவில்லை. கிரிக்கெட்டில் ஹாட்ரிக் தான் உள்ளது. 4-வது விக்கெட்டிற்கு என்ன பெயர் என்று தெரியாது. ’சிங்கம் 4’ என்று போட்டுக் கொண்டு வேறொரு கதை பண்ணுவதில் உடன்பாடு கிடையாது. அனைத்தையும் பல வருடங்கள் கழித்து ஒன்றிணைத்து கதையாக ‘சிங்கம் 4’ பண்ண வேண்டும். ஆனால் அதைவிட புதிய கதையொன்றை எழுதி இயக்கிவிடுவது சுலபம். அடுத்து புதிதாக ஒரு போலீஸ் கதை இயக்குவேன்”

இவ்வாறு ஹரி தெரிவித்துள்ளார்.

Tags: hari, suriya, singam 4

Share via: