’ஜெயிலர் 2’ பணிகள் மும்முரம்
13 Apr 2024
’ஜெயிலர் 2’ படத்திற்கான பணிகளை மும்முரமாக தொடங்கிவிட்டார் இயக்குநர் நெல்சன்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. 2023-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்தப் படம் வசூல் ரீதியாக அமோக வரவேற்பினைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கினார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால், அனைத்துமே கதையாக முடிவானவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்று பேசியிருந்தார்கள்.
தற்போது ‘ஜெயிலர் 2’ படத்துக்கான கதையினை முழுமையாக முடித்து சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினி இருவரிடமும் ஒப்புதல் வாங்கிவிட்டார் நெல்சன். லோகேஷ் கனகராஜ் படம் முடிவடைந்தவுடன், ‘ஜெயிலர் 2’ படத்துக்கு தேதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளார் ரஜினி.
ஜூன் மாதம் முதல் முதற்கட்ட பணிகளைத் தொடங்க திட்டமிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் எனவும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு ‘ஜெயிலர் 2’ என்ற பெயர் மட்டுமன்றி ‘ஹுக்கும்’ எனவும் வைக்கலாம் என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறது படக்குழு.
Tags: jailer 2 , nelson dilipkumar, rajinikanth