சென்னையில் இயக்குனர் ஷங்கர், ராம் சரண் சந்திப்பு

05 Jul 2021

கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க, ஷங்கர் இயக்க, ‘இந்தியன் 2’ படத்தைத் தயாரிப்பதற்காக அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 200 கோடிக்கும் கூடுதலாக செலவு செய்தது.

அப்படம் தயாரிப்பில் இருந்த போது கடந்த வருடம் படப்பிடிப்பில் நடைபெற்ற கிரேன் விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதன்பின் அப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவேயில்லை. படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும், ஷங்கருக்கும் இடையே பிரச்சினை வந்தது.

‘இந்தியன் 2’ படத்தை முடிக்காத நிலையில் ஷங்கர், தெலுங்கு, ஹிந்தியில் தலா ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

தங்களது ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் அந்தப் படங்களை இயக்கக் கூடாதென லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், அதற்கு நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்காமல் வழக்கையே தள்ளுபடி செய்தது.

அதன் காரணமாக ஷங்கர் தெலுங்கு, ஹிந்திப் படங்களை இயக்க எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வழி கிடைத்தது.

நேற்று தெலுங்கில் ஷங்கர் இயக்கப் போகும் நடிகர் ராம் சரண், அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் ஷங்கரை சென்னையில் சந்தித்து தங்களது படம் பற்றி பேசியுள்ளனர்.

விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படத்தின் நாயகன் ராம் சரண் இன்று டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

‘இந்தியன் 2’ படம் சம்பந்தமான வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. ஷங்கருக்கும், லைக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் உச்சமன்ற நீதிபதி பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அறிக்கை வந்த பிறகு தான் ‘இந்தியன் 2’ படத்தின் நிலை என்னவாகும் என்பது தெரிய வரும்.

Tags: shankar, ram charan, dil raju

Share via: