டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

03 Jan 2025

 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான காணொளி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் இடம்பெறும் காட்சிகள் பார்வையாளர்களை சிரிக்க வைத்திருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

விரைவில் இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், அதனையடுத்து படத்தினை பற்றிய புதிய தகவல்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார்- சிம்ரன் இணைந்து நடித்திருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Sasikumar , Simran, Tourist Family

Share via: