சிக்கலும், பிரம்மாண்டமும் கொண்ட ‘ராமாயணம்’
14 May 2024
‘ராமாயணம்’ படத்திற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ள போதிலும், பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, பாபி தியோல், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராமாயணம்’. நீண்ட வருடங்கள் நடைபெற்ற முதற்கட்ட பணிகளுக்குப் பிறகு தற்போது தான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர். அதற்குள் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.
இதனிடையே, இந்தப் படத்திற்கு சட்டச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால், முதலில் ‘ராமாயணம்’ படத்தினை 3 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. அதில் உள்ள முதன்மை தயாரிப்பாளரான அல்லு மண்டீனா மீடியா நிறுவனம் தங்களுடைய அனுமதி இல்லாமல் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தற்போதைய முதன்மை தயாரிப்பாளரான ப்ரைம் போகஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தவுடன் தான் ‘ராமாயணம்’ தொடர்பான முறையான அறிவிப்பு வரும்.
மேலும், தற்போது ‘ராமாயணம்’ படம் தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்பது முடிவாகியுள்ளது. 100 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 830 கோடி ரூபாய் செலவில் ‘ராமாயணம்’ படத்தினை உருவாக்கவுள்ளனர். இது முதல் பாகத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
Tags: ramayanam, sai pallavi, yash, ranbir kapoor