விவேக் கண்ணன் இயக்கத்தில், ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, சாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’.

இப்படம் பற்றி இயக்குனர் விவேக் கண்ணன் கூறுகையில்,

“இப்படத்தை முதலில் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எடுத்தோம். படப்பிடிப்பு ஆரம்பமான பின் இது தியேட்டருக்கான படம் என்பதை உணர்ந்தோம். இது ரவுடியிசம் பற்றிய படம் அல்ல. பணத்துக்காக கொலை செய்யும் கும்பலைப் பற்றிய கதை. எதற்காக கொலை செய்கிறார்கள், அந்த கும்பல்களுக்கு இடையேயான தொடர்பு, பழி வாங்குவது என ரத்தமும் சதையுமாக கதை நகரும். இரவு நேரங்களில் படப்பிடிப்பு அதிகமாக நடந்துள்ளது. 

சென்னை, மும்பை, காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள அந்த ‘கேங்’களைப் பற்றி உணர்வு பூர்வமான பின்னணியில் உருவாக்கியிருக்கிறோம். ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன், சாரா அவரவர் கதாபாத்திரங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள். சாகுந்தலா என்ற நெல்லைப் பெண்ணாக பிரியாமணி நடித்திருக்கிறார். சாரா பள்ளி மாணவியாக நடித்திருக்கிறார். படத்தின் முக்கிய ஹைலைட்டாக டிரம்ஸ் சிவமணியின் இசை இருக்கும். ஏப்ரல் மாதம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி பேசுகையில்,

“நானும் படத்தின் இயக்குனரும் வட சென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள். அதனால், அவரது எண்ணத்திற்கு ஈடு கொடுத்து என்னாலும் இசையைக் கொடுக்க முடிந்தது. இது போன்ற கேங் சண்டைகளை எனது சிறு வயதில் பார்த்து வளர்ந்திருக்கிறேன். லோக்கலான இசையை இந்தப் படத்தில் சேர்த்திருக்கிறேன். அது காட்சிகளுக்கு இன்னும் அதிகமான எமோஷனலைக் கொடுத்துள்ளது,” என்றார்.