
விஜய், சமந்தா நடிப்பில் ‘கத்தி’ படத்தை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக, ஐங்கரன் கருணாஸ், ஒரு சில நாளிதழ் பத்திரிகையாளர்களை மட்டும் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
அதோடு, பத்திரிகைச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
அதில், “சில பத்திரிகை குறிப்புகளில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவான நிறுவனம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் அந்தச் செய்தி தவறானதும், ஆதாரமற்றதும் ஆகும்.
உலகமெங்கும், குறிப்பாக இலங்கையில் உள்ள தமிழர்களின் நல் வாழ்விற்கு பல நல்ல செயல் திட்டங்களை லைகா நிறுவனத்தின் ஞானம் பவுண்டேஷன் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதை இங்கே தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்,” என்று அந்த பத்திரிகைச் செய்தியில் தெரிவித்துள்ளார்கள்.
அதோடு, இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு விதத்தில் உதவி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஞானம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் கரு. பழனியப்பன் இயக்கத்தில் சேரன், சினேகா நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற படத்தைத் தயாரித்து 2008ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தீபாவளியன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.