
‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் முதல் படம் இது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திலும், விஜய் நடிக்கும் படத்திலும் முதன் முறையாக இசையமைப்பாளராக பணிபுரிகிறார் அனிருத்.
தெலுங்கின் முன்னணி நடிகையான சென்னையைச் சேர்ந்த சமந்தா , விஜய்யுடன் ஜோடி சேரும் முதல் படம்.
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பாக ஐங்கரன் கருணாமூர்த்தி, லைகா சுபாஷ்கரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
பிப்ரவரி 3ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பமானது.
தொடர்ந்து ஹைதராபாத், ராஜமுந்திரி, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது சென்னையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அரங்கில் 7ம் தேதி முதல் ஆரம்பமான படப்பிடிப்பு, தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதற்கடுத்து வட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற உள்ளன.
இப்படத்தின் வில்லனாக ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். இவர் ‘நியூயார்க், ஜான்னி, கத்தார், ஷாட் கட் ரோமியோ’ உட்பட 25க்கும் மேற்பட்ட ஹிந்திப் படங்களில் நாயகனாக நடித்தவர்.
விஜய் நண்பனாக நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடிக்கிறார். பெங்காலி நடிகர் தோட்டா ராய் சௌத்ரி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
ஆர்யா, நயன்தாரா நடித்த ‘ராஜா ராணி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் வில்லியம்ஸ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
‘விஸ்வரூபம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற லால்குடி இளையராஜா இந்த படத்தில் கலை இயக்குனராகப் பணியாற்றுகிறார்.
தேசிய விருதுகளைப் பெற்ற ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பைக் கவனித்துக் கொள்கிறார்.
சண்டைப் பயிற்சியை அனல் அரசு செய்ய, இதுவரை படமான பாடல் காட்சிகளுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.
தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது ‘கத்தி’.