யார் இந்த லைகா தயாரிப்பு நிறுவனம் ?

10 Apr 2014
Tom Blenkinsop letter‘கத்தி’ திரைப்படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு நிறுவனம் என ஈழத் தமிழர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த நிறுவனம் தயாரித்து வரும் ‘கத்தி’ படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக ஐங்கரன் கருணாமூர்த்தி சில பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். அந்நிறுவனம் இலங்கை அரசு நடத்திய சில விழாக்களுக்கு ஸ்பான்சராக இருந்துள்ளது என்றும், அந்த நிறுவனத்தில் ராஜபக்சேவின் பங்குகளும் இருக்கிறது என்றும் தொடர்ந்து இன்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக இணைய தளங்களில் நாம் தேடிய போது கிடைத்த சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம். “லைகா புரொடக்ஷன்ஸ் பிரைவிட் லிமிடெட் நிறுவனம் 2007 மார்ச் 16ம் தேதியன்று சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் இயக்குனர்களாக நீலகண்ட் நாராயண்புர், மிலிந்து புருஷோத்தம் காக்லே, பிரேமநாதன் அய்யாதுரை சிவசாமி ஆகியோர் செயல்படுகின்றனர். இந்நிறுவனத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் 8 கோடி ரூபாய். இந்நிறுவனத்தின் கடைசி ஆண்டு பொதுக்கூட்டம் 2013ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் தேதியன்று நடைபெற்றுள்ளது,” என்ற தகவல் கிடைத்தது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான லைகா மொபைல்ஸ் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கி வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. லைகா மொபைல் நிறுவனம் இலங்கையில் 2013-ல் நடைபெற்ற காமென்வெல்த் மாநாட்டுக்கான ‘கோல்டு ஸ்பான்சர்’ என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் டோரி கட்சிக்கு 4,26,292 பவுண்டுகள் நன்கொடையாக லைகா மொபைல் நிறுவனம் அளித்துள்ளது என இங்கிலாந்து பிரதமருக்கு, லேபர் கட்சியின் எம்பியான டாம் பிளக்கின்சோப் கடிதம் (அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த கடிதத்தை இணைத்துள்ளார்) எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து அது பற்றிய விசாரணைக்கும் இங்கிலாந்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் லைகா நிறுவனத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவிக்குமா ?

Share via: