‘டிமான்ட்டி காலனி’ - அடுத்த பேய் ஹிட்…
21 May 2015
ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘டிமான்ட்டி காலனி’.
இந்தப் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க மற்றும் ‘சூது கவ்வும்’ ரமேஷ் திலக், பின்லாந்து நடிகர் அன்டில் ஜாஸ்கெலினன், சனத், அபிஷேக் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது,
“இந்தப் படத்தை ஒரு ஹாரர் படம்னு சொல்றத விட ஒரு த்ரில்லர் படம்னு சொல்லலாம். படத்துல எங்கயுமே அடுத்து இதுதான் நடிக்கப் போகுதுன்னு யூகிக்கவே முடியாது.
இப்படி ஒரு படம் பண்ணணும்னு முதல்ல நினைக்கலை. கதை டிஸ்கஸ் பண்ணும் போது இந்தப் படத்தைப் பத்தின ஒரு விஷயம் வந்துது. இப்ப இருக்கிற டிரென்ட்டுல இந்த படம் பண்ணணும்னு பண்ணலை.
அருள்நிதி சார் ஒரு இயக்குனரோட நடிகர். இந்தப் படத்துல நடிக்கும் போது இப்படித்தான் வேணும்னு கேட்டால் அப்படியே செய்வாரு. ஒரு டெடிகேஷனான நடிகர் அவர். இந்தப் படத்தைப் பார்த்த பலரும் அவருடைய நடிப்பை அந்த அளவிற்குப் பாராட்டியிருக்காங்க.
இந்தப் படத்துல வில்லனா பின்லாந்துல நாடக நடிகரா இருக்கிற ‘அன்டில் ஜாஸ்கெலினன்’ நடிச்சிருக்காரு. 6 அடி 9 இன்ச் இருக்கிற அவரோட உயரமே அந்த கேரக்டருக்கு மிகப் பெரிய சப்போர்ட்டா அமைஞ்சிருக்கு.
த்ரில்லர் படம்கறதையும் மீறி இந்தப் படம் ஒரு புதுமையான அனுபவமா கண்டிப்பா இருக்கும்,” என்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
இப்படத்தை மோகனா மூவீஸ் தயாரிக்க ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. தொடர்ந்து “அரண்மனை, பிசாசு, காஞ்சனா 2” ஆகிய பேய்ப் படங்களை வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த ‘பேய் ஹிட்’டுக்குத் தயாராகிவிட்டது.

