பா.விஜய் இயக்கத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி’….
25 May 2015
பல சூப்பர் ஹிட்டான பாடல்களையும், ‘ஒவ்வொரு பூக்களுமே…’ பாடலுக்கு தேசிய விருது பெற்றவருமான பா.விஜய் தற்போது இயக்குனராக மாறியிருக்கிறார்.
‘ஸ்ட்ராபெர்ரி’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்து வருகிறார்.
பா.விஜய் பாடல் எழுதி வருவதுடன், ‘ஞாபகங்கள்’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அடுத்து ‘இளைஞன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. தற்போது ‘தகடு தகடு’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
நடிகராக தனக்கு ஒரு வெற்றி வேண்டும் என்பதற்காகவே இயக்குனர் ஆனேன் என்கிறார் பா.விஜய்.
“ஸ்ட்ராபெர்ரி’ என படத்திற்குப் பலரும் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருக்கிறீர்களே எனக் கேட்கிறார்கள். படத்தின் தலைப்பு மூலமாகத்தான் தமிழை வளர்க்க வேண்டும் என்பது இல்லை. என் பாடல்கள்லயே கூட ஆங்கிலக் கலப்பு நிறைய இருக்கும். அதற்கு மேடை இருக்கிறது, புத்தகங்கள் இருக்கிறது. கதைக்குள்ளேயே ஒரு விஷயமா அந்த டைட்டில் இருக்கு. அது மட்டுமில்லாம, ஸ்ட்ராபெர்ரிக்கு என் தமிழ்ப் பெயர்னு பார்த்தால் ‘செம்புற்றுப் பழம்’னு இருந்துச்சி. அப்படி டைட்டில் வச்சால் யாருக்கும் புரியாது, என் மேல விமர்சனம் வந்தாலும் பரவாயில்லைன்னு அந்த டைட்டிலை வச்சேன்.
‘ஞாபகங்கள்’னு ஒரு அருமையான தலைப்பு வச்சி, கவிதைமயமான காட்சிகளை வச்சி படம் எடுத்தோம், ஒரு தயாரிப்பாளராக எனக்கு அந்தப் படம் வலியைக் கொடுத்துச்சி.
‘ஞாபகங்கள், இளைஞன், தகடு தகடு’ ஆகிய படங்கள்ல நான் நடிச்ச அனுபவம்தான் எனக்கு இந்தப் படத்தை இயக்கற தைரியத்தைக் கொடுத்துச்சி.
இந்தப் படத்துல நான் ஒரு கால் டாக்சி டிரைவராக நடிக்கிறேன், என் நண்பரா ரோபோ சங்கர் நடிச்சிருக்காரு. சமுத்திரக்கனி, தேவயானி, தம்பிராமையா ஆகியோர் மற்ற கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல நாயகியா ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்துல நடிச்ச அவ்னி மோடி நடிச்சிருக்காங்க. படத்துல அவங்க கேரக்டர் ஒரு பேய் கேரக்டர். என்ன இதுவும் பேய்ப் படமான்னு நினைக்காதீங்க, இந்தப் படத்தை இரண்டு வருஷம் முன்னாடியே ஆரம்பிச்சேன். ஆனால், இப்ப நிறைய பேய்ப் படங்கள் வந்துக்கிட்டிருக்கு. பேய்ப் படம்னு மட்டும் பார்க்காம, இதை ஒரு அறிவியல் த்ரில்லர் படம்னு சொல்லலாம்.
படத்துல நிறைய சி.ஜி. காட்சிகள் இருக்கு. பாடல் காட்சிகளுக்காக எந்த வெளிநாட்டுக்கும் போகலை. டி.இமான், ஜி.வி.பிரகாஷ், நடிகர் சித்தார்த், தேசிய விருது பெற்ற உத்ரா இந்தப் படத்தில் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இப்படத்தின் இசையமைப்பாளர் தாஜ்நூர். அவர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்த போதே எனக்கு நெருக்கமான நண்பரானார். இப்படி படம் பண்ணப் போறோம்னு சொன்ன உடனே ரொம்ப சப்போர்ட் பண்ணாரு.
விரைவில் இசை வெளியீட்டையும், அதைத் தொடர்ந்து பட வெளியீட்டையும் செய்ய இருக்கிறோம். மக்களுக்குப் பிடிக்கிற மாதிரியான ஒரு படத்தைக் கொடுக்கணும்னு இந்தப் படத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டேன். முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் த்ரில்லரா இந்தப் படம் இருக்கும்,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் பா.விஜய்.

