சினிமாவில் நயன்தாரா என்றாலே கறார் பார்ட்டி, கோபக்காரர், வேலையில் ரொம்ப சின்சியர், பேட்டி கொடுக்க மாட்டார் என்றெல்லாம் சொல்வார்கள். அவரும், ஏதேனும் பொது நிகழ்ச்சிக்கு வந்தால் சுற்றிலும் பவுன்சர்கள் படையுடன் தான் வருவார். இதெல்லாம் வெளியே தெரிந்த செய்தி. ஆனால், அவருக்கு ரொம்பவே குழந்தை மனது. தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒன்று என்றால், உடனே துடிதுடித்து விடுவார். 

அவருடைய மனது எப்படிப்பட்டது என்பதற்கு 'திருநாள்' படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். 

ராம்நாத் இயக்கத்தில் ஜீவா நடித்த 'திருநாள்' படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நயன்தாராவுக்கு உதவியாளராக பணிபுரிந்தவருக்கு உடம்பு சரியில்லை என்பதால், கும்பகோணத்திலேயே ஒரு பையனை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப் பையனும் தினமும் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் அந்தப் பையன் வரவில்லை என்றவுடன், புதிதாக ஒருவரை நியமனம் செய்துவிட்டார்கள். படப்பிடிப்பில் நிறைய பேர் பணிபுரிவதால், அவர்களோ இந்தப் பையன் வராததைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நயன்தாராவோ அந்தப் பையன் மீண்டும் வருவான் என்று இரண்டு நாட்கள் காத்திருந்துள்ளார், ஆனால், அவர் வரவேயில்லை.

உடனே தனது டிரைவரிடம் சொல்லி, அந்தப் பையன் ஏன் வரவில்லை, என்னாச்சு என்று விசாரியுங்கள் எனச் சொல்லியிருக்கிறார். அவர், படக்குழுவினர் மூலமாக வீட்டு அட்ரஸ் வாங்கிச் சென்று பார்த்துள்ளார். அவருடைய பாட்டியை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது.  நயன்தாராவிடம் கூறியவுடனே அவருக்கான ஒரு வாரச் சம்பளம் போக தனது பங்காக பெரும் தொகை ஒன்றிணையும் கொடுத்து அனுப்பியுள்ளார். 

ஒரு வாரம் பணிபுரிந்த பையனுக்கே இந்த உதவி என்றால், நண்பர்களுக்கு எவ்வளவு செய்திருப்பார்.