சசிகுமார் நடிக்கும் ‘நான் மிருகமாய் மாற’, நவம்பர் வெளியீடு
18 Oct 2022
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி ராஜா தயாரிக்க, சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நான் மிருகமாய் மாற’.
வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்தப் படம்.
ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே படத்தின் கதை. இந்த படத்தில் சசிகுமார் ஒலி பொறியாளராக (சவுண்ட் இஞ்சினியர்) நடித்துள்ளார். ஒருவனின் வாழ்க்கையை ஒலி எவ்வாறு மாற்றுகிறது என்பது படத்தின் திருப்புமுனையாக அமையும், என்கிறார் இயக்குனர் சத்ய சிவா.
"இப்படத்தின் தலைப்பு, திரைக்கதைக்குப் பொருத்தமாக இருக்கும். ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வில் நடக்கும் கசப்பான சம்பவங்களால் எவ்வாறு ஒரு மிருகமாக மாறுகிறான் என்பதே கதை. எனது போராட்டம் மற்றும் வலி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் நான் திரைப்படங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றேன். வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல, எல்லாம் மாறும். அதனை நான் இப்போது புரிந்து கொண்டேன். பக்குவம் மற்றும் நிதானம் தான் மிகவும் முக்கியமானது. ஓடிக்கொண்டே இருப்பது வாழ்க்கை அல்ல. நிதானமாக பிடித்தவற்றை செய்வது மிகவும் முக்கியமானது.
‘ஈசன்’ படம் இயக்கி முடித்த பின் ஒரு சரித்திரப் படத்திற்கான கதையை எழுதினேன். இப்பொழுது வெளிவந்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் பாகுபலிக்கு முன்னரே அந்த திரைப்படத்திற்கான பணி தொடங்கியது.
ஆனால் படத்தின் செலவு மிகவும் அதிகமாக இருந்ததால், அந்த காலகட்டத்தில் எடுக்க முடியவில்லை. ஆனால் விரைவில் அப்படத்தினை இயக்குவேன்.
மதுரை எனது சொந்த ஊர். நான் எனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறேன். மேலும் எனது திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரையைச் சார்ந்த பகுதிகளில் நடைபெறுகிறது. அங்கு தங்கி இருப்பது மிகவும் எளிதாக உள்ளது.
அங்கேயே டப்பிங் ஸ்டூடியோ உள்ளிட்டவை இருப்பதனால், என் கிராமத்தில் தங்கி வேலை செய்வது எனக்கு மிகவும் எளிதாக உள்ளது. எனவே சென்னைக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே வருகிறேன்,” என்றார்.
படத்தின் நாயகியான ஹரிப்ரியாவிற்கு 'நான் மிருகமாய் மாற' திரைப்படம், செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் உடன் இரண்டாவது, மற்றும் தமிழில் நான்காவது திரைப்படம். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பாக ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’ மற்றும் ‘வாராயோ வெண்ணிலாவே’ படங்களில் நடித்துள்ளார்.
“எனது கன்னட திரைப்படமான ‘பெல் பாட்டம்’ படத்தைப் பார்த்த இயக்குனர் சத்ய சிவா, இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு அளித்தார். படத்தின் கதை நன்றாக இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். கன்னடத்தில் பிஸியாக நடித்து வந்ததால்தான் தமிழில் நடிக்க முடியவில்லை. தமிழில் கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சசிகுமார் ஒரு நடிகர் மட்டுமல்லாது இயக்குனராகவும் இருப்பதனால், அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் மற்றும் நுணுக்கங்கள் கற்றுக் கொண்டேன். மேலும் தமிழில் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தில் நான் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில், கணவன் மற்றும் குழந்தையை பாதுகாக்கும் ஒரு எதார்த்தமான இல்லத்தரசியாக நடித்துள்ளேன்”, என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா பட்டச் சார்ஜி இந்த படத்தின் ஒளிப்பதிவை செய்துள்ளார், மற்றும் ஸ்ரீகாந்த் என்பி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
Tags: naan mirugamai maara, sathya siva, sasikumar, ghibran, haripriya, vikranth