ஓவர் பில்ட்-அப்பில் படம் எடுக்கிறார்கள், ஆர்வி உதயகுமார் கவலை

23 Jan 2021

ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் ‘முன்னா’. 

சங்கை குமரேசன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் வி.சேகர் பேசியதாவது...

"கொரோனாவிற்குப் பின் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி. ஒரு வெற்றிப் படத்திற்கு நல்ல கதை, இயக்குநர் தான் தேவை என்பது உண்மை. ஒரு படம் எடுக்கும் போதே பல பேருக்கு வேலை கிடைத்து விடுகிறது. அந்த வகையில் ஒரு தயாரிப்பாளர் படம் வெளியாகும் முன்பே பலரை வாழ வைக்கிறார். 

சின்னப்படங்கள் தான் நிறைய பேர்களை வாழ வைக்கிறது. பெரிய படங்கள் ஆலமரம் என்றால் சிறிய படங்கள் தான் நெல் போன்றது. எம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார். அதுதானே உண்மை. ஒரு முதலாளியை மதிக்கிற துறை முக்கியம். பெரிய படம் அளவிற்கு நமது சின்னப்படங்களும் ஓட வேண்டும் என்றால் நாம் பெரிய படங்களை விட அதிகமாக உழைக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துகிறேன்" என்றார்.

இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேசியதாவது.. 

 "முன்னா’ படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தக் கொரோனா கால கட்டத்தில் 150 நாட்களுக்கு மேல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் விக்னேஷ் எங்களுக்கு பெரிய உதவி செய்தார். 

நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். ரஷ்யாவின் புரட்சிக்குக் கூட சினிமா ஒரு உதவியாக இருந்தது. நாம் இனி அறிவுபூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும். இப்போதெல்லாம் ஓவர் பில்டப்பில் தான் படம் எடுக்குறார்கள். நேர்மையாக படம் எடுக்க வேண்டும். நேர்த்தியாக படம் எடுத்தால் எப்படி ஓடாமல் போகும். 

நம் ரசிகர்கள் சரியான படங்களை நிச்சயமாக ஓட வைப்பார்கள். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்தப்படத்தை எதையும் எதிர்பார்க்காமல் எடுத்திருக்கிறார்கள். இப்படியான தைரியம்தான் நிறைய பேர்களை உருவாக்கி இருக்கிறது. அதுபோல் இந்த இயக்குநரையும் பெரிதாக உருவாக்கும்," என்றார்

இயக்குநர் சங்கை குமரேசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரை ஆற்றினார்.

"இருக்குறதை வச்சி எடுத்த படம் தான் இது. நிறைய ஏமாற்றங்கள் இருந்தது. ஆனாலும் சொன்னது போல படத்தைத் துவங்கினோம். காரைக்குடி அருகே சுற்றி சுற்றி 34 நாட்கள் எடுத்து முடித்தோம். இந்தக் கதையில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கு. அதனால் கதை நாயகனாக என்னையே நடிக்கும் படி சொன்னார்கள். இந்தப்படத்தின் கதை இருக்குறதை வைத்து வாழ வேண்டும் என்ற ஒருவரி தான். மனதுக்கு நிம்மதியான வாழ்க்கை தான் நல்ல வாழ்க்கை. இந்தப்படத்தின் முக்கிய நோக்கம் எதற்காகவும் கலங்கத் தேவையில்லை என்ற கருத்தைச் சொல்வது தான்," என்றார்.

இறுதியில் சிறப்பு விருந்தினர்கள் இசை தட்டை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொள்ள நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது

Tags: r.v. udayakumar, v sekar, munna

Share via: