மோகன்லால் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

18 Sep 2023

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. இந்த திரைப்படத்தை பற்றிய புதிய தகவல்களுக்காக நாடு முழுவதும் உள்ள திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிறந்த நாளன்று 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் வெளியீட்டு தேதியை நட்சத்திர நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரத்யேக காணொளி, மோகன்லாலின் பிறந்தநாளன்று வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாண்டிச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைப்பெற்று நிறைவடைந்தது. இப்படத்தின் திரைக்கதையை பி. எஸ். ரஃபீக் எழுதியுள்ளார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தீபு ஜோசப் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ரோனக்ஸ் சேவியர் வடிவமைத்திருக்கிறார்.‌

இந்தத் திரைப்படத்தை மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் ஜான் & மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
 

Tags: மோகன்லால் ,மலைக்கோட்டை வாலிபன்,லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

Share via: