தமிழ்த் திரையுலகின் சீனியர் நடிகையான மீனா, அவருடைய கணவரை சமீபத்தில் இழந்தார். உடல்நலக் குறைவால் அகால மரணமடைந்த கணவர் வித்யா சாகரின் மரணம் மீனாவை உடல் உறுப்புகளை தானம் செய்யும் முடிவை எடுக்க வைத்துள்ளது.
அது குறித்து தன்னுடைய டுவிட்டர் தளத்தில், “ஒரு உயிரைக் காப்பாற்றுவதைவிட சிறந்தது எதுவுமில்லை. உயிரைக் காப்பாற்ற உடல் உறுப்புகள் தானம் என்பது உன்னதமான ஒரு வழி.
இது ஒரு வரப்பிரசாதம், நீண்ட நாட்கள் நோயுடன் போராடும் பலருக்கு இது இரண்டாவது வாய்ப்பு. தனிப்பட்ட முறையில் அதைக் கடந்து வந்துள்ளேன். தானம் செய்பவர்கள் இன்னும் இருந்திருந்தால் எனது சாகர் காப்பாற்றப்பட்டு எனது வாழ்க்கை மாறியிருக்கும். தானம் செய்யும் ஒருவரால் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
உடல் உறுப்பு தானம் பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். இது டாக்டர்கள், தானம் செய்பவர்கள், பெற்றுக் கொள்பவர்களுக்கு இடையிலானது மட்டுமல்ல. இது குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரை பாதிக்கிறது.
எனது உடல் உறுப்புகளை தானம் செய்வேன் என இன்று நான் உறுதி ஏற்கிறேன். உங்கள் பாரம்பரியத்தை வாழ வைக்க சிறந்த வழி,” எனப் பதிவிட்டுள்ளார்.
உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்துள்ள மீனாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.