விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் 14ம் தேதி ஹிந்தியிலும் வெளியாகியது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி கொரானோ பாதுகாப்பு வழிமுறையாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ‘மாஸ்டர்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக தெலுங்கில் இதுவரை டப்பிங் செய்யப்பட்டு வெளியான விஜய் படங்களை விட ‘மாஸ்டர்’ நல்ல வசூலைப் பெற்றுள்ளது. அங்கிருந்து வரும் தகவலின்படி இதுவரையில் மொத்தமாக 22 கோடி வசூலாகியுள்ளது. அதில் பங்குத் தொகை 13 கோடி. படத்தின் தெலுங்கு உரிமை விற்கப்பட்ட விலை 9 கோடி என்கிறார்கள். எனவே, 4 கோடி லாபத்தை இப்படம் தற்போது பெற்றுள்ளது.
தயாரிப்பாளரும், பிஆர்ஓவுமான மகேஷ் கொனேரு இப்படத்தை தெலுங்கில் வினியோகித்தார். படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், நாயகன் விஜய் ஆகியோரைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய்யைச் சந்தித்த போது அவர் படத்திற்கு ஆதரவளித்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னதாக மகேஷ் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் படங்களுக்கு ஏற்கெனவே தமிழ்நாடு தவிர, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளதால் அவர் தென்னிந்திய அளவில் வசூ ஸ்டார் ஆக உயர்ந்துள்ளார்.