வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கர்ணன்’.

கொரானோ தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சினிமா தியேட்டர்களில் ஏப்ரல் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என உத்தரவிட்டுளளது அரசு.

50 சதவீத இருக்கைகளுடன் ‘கர்ணன்’ படம் வெளியாகுமா என்ற சந்தேகம் சிலரிடம் எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக படம் சொன்னது சொன்னபடி வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும்,  #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

‘கர்ணன்’ படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருக்கிறது. அதற்கேற்றபடி ரசிகர்களும் பெரிய வரவேற்பைக் கொடுப்பார்கள் என தியேட்டர்காரர்களும் எதிர்பார்க்கிறார்கள்.