2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தசெ ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில் சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ்,  மற்றும் பலர் நடிக்கும் படம் ஜெய் பீம்.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 240 நாடுகளில் வெளியாக உள்ளது. 

இப்படத்தின் டிரைலர் நேற்று யு டியூபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டிரைலரைப் பார்த்த ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், இது வேற மாதிரியான படமாக இருக்கும் என தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

990-களில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிந்தனையைத் தூண்டும் கதை தான் ‘ஜெய் பீம்’. 

செங்கேனி மற்றும் ராஜகண்ணு என்ற பழங்குடி ஜோடியின் வாழ்க்கையில் கதை நம்மை அழைத்துச் செல்கிறது. ராஜகண்ணு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகும்போது அவர்களின் உலகம் சிதறுகிறது. 

செங்கேனி தனது கணவனைத் தேடும் முயற்சியில் வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். செங்கேனிக்கு சந்துரு எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆதரவற்றவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் போல வரும் ஒரு மனிதனைப் பற்றிய ஒரு துடிப்பான கதை. 

2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர், தயாரிப்பாளர் மற்றும் முன்னணி நடிகர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவின் கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறுகையில்,

"இந்த கதாபாத்திரத்தை படத்தில் சித்தரிப்பதில் நான் நியாயம் செய்திருப்பேன் என்று நம்புகிறேன். இந்த சிறப்புப் படத்திற்காக ப்ரைம் வீடியோவுடன் எங்கள் ஒத்துழைப்பைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் படத்தை பல மொழிகளில் பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்ல உள்ளோம். த.செ.ஞானவேலின் தொலைநோக்குப் பார்வையில் எல்லைகளைக் கடந்து பயணிக்கும் ஒரு உணர்வுபூர்வமான படம் இது,” என்கிறார்.

இயக்குனர் த.செ.ஞானவேல் கூறுகையில்,

"ஜெய் பீம் படத்தின் மூலம் பார்வையாளர்களைச் சென்றடைவதே எனது இதயப்பூர்வமான விருப்பமாகும். மேலும் ஒரு மனிதனின் உறுதி, எப்படி ஒரு இயக்கமாக மாறும், ஒவ்வொரு சிறிய அடியும் ஒரு பெரிய பாய்ச்சலாக எப்படி மாறும் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம்.

 "ஜெய் பீம் படத்தின் கதை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ள ஒன்று. இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தைப் பற்றி பேசுகிறது. ஒரு சமூக அறப்போராளி சண்டையின் அழைப்பை எடுத்துக் கொள்கிறார். ஆதரவற்ற, தாழ்த்தப்பட்ட பெண்ணின் உரிமைகளுக்காகவும் அவளுக்கு நீதியை வழங்குவதற்காகவும் என்னை பொறுத்தவரை இந்த படம் முடிந்தவரை பரந்த பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ப்ரைம் வீடியோவில் 'ஜெய் பீம்' வெளியாவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது சினிமா ரசிகர்களால் பார்க்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்கிறார்.