உலக அளவில் சமூக வலைத்தளங்கள் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்சப் என பல வகையான சமூக வலைத்தளங்கள் உள்ளன. உலக அளவில் இந்தியாவில் இவற்றைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.

இந்த சமூக வலைத்தளங்களில் எழுத்து வடிவிலும், வீடியோ வடிவிலும் தான் பயனாளர்கள் தங்களது பதிவுகளை அதிகம் இடுகிறார்கள்.

ஆனால், ஆடியா வடிவில் அதாவது தங்களது குரலில் பதிவு செய்து வெளியிடும் புதிய சமூக வலைதளமான ‘ஹுட்’ என்ற ஒன்றை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆரம்பித்துள்ளார். அவருடன் சன்னி போகலா என்பவரும் இதற்காக இணைந்துள்ளார்.

இந்த சமூக வலைத்தளத்தை நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவு மூலம் இதைத்  துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்,

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்பா ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த போது, ‘ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு” என்ற ஆடியோ பதிவை எனக்கு அனுப்பி இருந்தார். அந்தப் பதிவைக் கேட்டதும்தான் இப்படி ஒரு சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

இந்த மொபைல் செயலியில் 60 வினாடிகளுக்கு ஆடியோ பதிவு செய்யலாம். கமெண்ட் செய்யலாம், எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கூட குரல் மூலம் பதிவு செய்யலாம். 15 இந்திய மொழிகள், 10 உலக மொழிகளில் இந்த ஹுட் செயல்பட உள்ளது.

அப்பாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளை பேசத் தெரியும். ஆனால், தமிழை எழுதத் தெரியாது. இப்படி தங்களுக்குத் தெரியாத மொழிகளில் பதிவு செய்வதில் ஒரு பிரச்சினை இருக்கும். தற்போது ஹுட் மூலம் ஒரு மொழியில் பேசத் தெரிந்தாலே போதும்  அந்த மொழியில் நீங்கள் பதிவு செய்யலாம்.

அப்பாவுக்கு தமிழ் எழுதத் தெரியாது என்பதை சொன்னதில் எந்த பிரச்சினையும் இல்லை, இதை வெளிப்படையாகவே சொல்கிறேன், அதனால் அவருடைய மதிப்பு குறையப் போவதில்லை,” என்றும் சௌந்தர்யா கூறினார்.