இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகும் ‘இளையராஜா’ பயோபிக்

16 May 2024

‘இளையராஜா’ பயோபிக்கை இசையமைப்பாளரே இல்லாமல் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘இளையராஜா’. இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. இதனை பெரும் பொருட்செலவில் அனைத்து மொழிகளிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

இதற்கான திரைக்கதை உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இளையராஜாவை சந்தித்து முழுதிரைக்கதையையும் கூற இருக்கிறார் அருண் மாதேஸ்வரன். இந்தப் படத்தில் இளையராஜாவும் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

’இளையராஜா’ பயோபிக்கிற்கு இசையமைப்பாளர் யார் என்பது முடிவாகாமல் இருந்தது. தற்போது இசையமைப்பாளரே இல்லாமல் இந்தப் படத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளனர். எப்படியென்றால், இளையராஜா இசையமைப்பில் உருவான பாடல்கள், பின்னணி இசைக் கோர்ப்புகள் ஆகியவற்றை வைத்தே முழுப்படத்தின் பின்னணி இசையையும் உருவாக்க உள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு. தற்போது தனுஷ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகின்றன.

Tags: ilayaraja, dhanush, ilayaraja biopic

Share via: