தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த, பல திறமைசாலிகளை அறிமுகப்படுத்திய, ஆர்.பி.சௌத்ரியின் 'சூப்பர்குட் பிலிம்ஸ்' நிறுவனம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக 95 படங்கள் வரை தயாரித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் 94-ஆவது படமாக சிரஞ்சீவி நடிக்கும் ‘காட்பாதர்’ தெலுங்குப் படம் தயாராகி உள்ளது. சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் என்வி பிரசாத் இணைந்து தயாரிக்க, மோகன்ராஜா இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘லூசிபர்’ திரைப்படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது.
அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் ஹிந்தி நடிகர் சல்மான்கான் முதல் முறையாக தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள படம் இது வில்லனாக சத்யதேவ் நடிக்க, மற்றும் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ஷாயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன், சுனில், முரளி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே.வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 96வது படமாக பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்க மலையாளத்தில் ‘ஹனுமான்’ மற்றும் தமிழில் 'டாப் கியர்' ஆகிய படங்கள் தயாராகிறது.