மாதவன் நடிக்கும் ஜிடி நாயுடு பயோபிக் ‘ஜிடிஎன்’
27 Oct 2025
டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரிப்பில், புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'ஜிடிஎன்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது.
தேசிய விருது வென்ற ‘ராக்கெட்ரி’ படத்தில் விண்வெணி விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தை திரையில் அழகாகப் பிரதிபலித்து வென்றவர் மாதவன். அந்த வகையில், ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தையும் திரையில் சரியாக பிரதிபலித்திருக்கிறார் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது முதல் பார்வை
புதுமை, அறிவியல் மற்றும் பொது சேவையில் ஜி.டி. நாயுடுவின் மகத்தான பங்களிப்பு இந்திய வரலாற்றில் அவருக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. 'இந்தியாவின் எடிசன்' மற்றும் 'கோயம்புத்தூரின் செல்வத்தை உருவாக்கியவர்' என்று பரவலாக அறியப்படும் அவரது நீடித்த மரபு இந்த படத்தின் மூலம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மிக நீளமான பாலத்திற்கும் அவரது பெயர் சூட்டப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறது. அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகியுள்ள படத்தின் முதல் பார்வை அவருக்கான அஞ்சலியாக அமைந்துள்ளது.
விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தைத் தொடர்ந்து, தேசிய விருது பெற்ற வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் அணிகள் மீண்டும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்க, சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை மற்றும் காலத்தின் நம்பகத்தன்மையை திரையில் அப்படியே பிரதிபலிக்கும் விதமாக அவரது பிறந்த இடமான கோயம்புத்தூரில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவாளராகவும், கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றுகிறார். முரளிதரன் நிர்வாக தயாரிப்பாளராக உள்ளார்.
இந்தப் படம் 2026 கோடை காலத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Tags: gdn, gd naidu, madhavan
