கணவன் மனைவியின் கனவுகளைச் சொல்லும் ‘மிடில் கிளாஸ்’

08 Nov 2025
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘மிடில் கிளாஸ்’. தேவ் மற்றும் கே.வி. துரை இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ள இந்தப் படத்தை கிஷோர் எம். ராமலிங்கம் இயக்கியிருக்கிறார்.
 
காமெடி நடிகராக பிரபலமான முனிஷ்காந்த் இதில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார், அவருக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடித்துள்ளார். வரும் நவம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் குறித்து, இயக்குநர் கிஷோர் எம். ராமலிங்கம், நடிகர்கள் முனிஷ்காந்த் ராமதாஸ், விஜயலட்சுமி, தயாரிப்பாளர்கள் துரை மற்றும் தேவ் ஆகியோர் பத்திரிகையாளர்களுடன் சுவாரஸ்யமான உரையாடலை நிகழ்த்தினர்.

இயக்குநர் கிஷோர் எம். ராமலிங்கம் படத்தின் கதை குறித்து பகிர்ந்து கொண்டார்:
 
“இது ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி இடையேயான வேறுபட்ட மனநிலைகளைச் சுற்றிய கதை. முனிஷ்காந்த் ராமதாஸ் மற்றும் விஜயலட்சுமி இந்த ஜோடியாக நடித்துள்ளனர். முனிஷ்காந்துக்கு கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, அங்கு வீடு கட்டி நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவு. ஆனால், அவரது மனைவி விஜயலட்சுமிக்கோ நகர வாழ்க்கையின் வசதிகளை ரசிக்க வேண்டும் என்ற எண்ணம். இந்த வேறுபாடுகளால் இருவருக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும்.

விஜயலட்சுமி தனது கருத்துகளை திட்டவட்டமாக வெளிப்படுத்தினாலும், முனிஷ்காந்த் அதைப் பெரிதுபடுத்தாமல், மனதுக்குள் புழுங்கி அமைதியாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார். இப்படி சாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கையில், எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்படுகிறது – அது அவர்களின் உலகத்தை தலைகீழாக மாற்றுகிறது. இதை ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறேன்.

படத்தின் முதல் அரை மணி நேரம் குடும்பக் கதையாக செல்லும்; பின்னர் யூடியூப் உலகத்தைச் சுற்றிய திருப்பங்களுடன் மாறுகிறது. இந்த குடும்பம் எப்படி சவால்களை எதிர்கொள்கிறது என்பதை எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் விவரித்திருக்கிறேன்.

முனிஷ்காந்தை நாயகனாக நடிக்க வைக்க கேட்டபோது, அவர் தயங்கினார். ‘நான் ஹீரோ இல்லை, இந்த கதைக்கு எப்படி பொருந்துவேன்?’ என்று கேட்டார். ஆனால், இந்த கேரக்டர் குணச்சித்திரம், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து பரிமாணங்களும் கொண்டது என்பதை விளக்கி, சம்மதிக்க வைத்தேன்.

அதேபோல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் விஜயலட்சுமியிடம் கதை சொன்னபோது, முழு ஸ்கிரிப்டையும் கேட்டு, தனது ரோலின் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனே ஒப்புக்கொண்டார்.

படத்தில் ராதாரவி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாகவும், குரோஷி ஆட்டோ டிரைவராகவும் நடிக்கிறார்கள். காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, கோடாங்கி ஆகியோர் வித்தியாசமான வேடங்களில் அசத்துகின்றனர். மாளவிகா அவினாஷ் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார்.”

ஒளிப்பதிவை சுதர்சன் கையாண்டுள்ளார், இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜ் (சந்தோஷ் நாராயணனின் உதவியாளர்) பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். பாடல் வரிகளை மோகன் ராஜா கதிர் மொழி மற்றும் ஏகன் எழுதியுள்ளனர்.

நடிகர் முனிஷ்காந்த் ராமதாஸ் பேசுகையில்,
 
“நான் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு தயாராக இல்லை என்று நினைத்தேன் – அதற்கு நிறைய உழைப்பு தேவை. ஆனால், இயக்குநர் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டேன். இது ஒரு அருமையான குடும்பத் தலைவன் ரோல்.

சில காட்சிகளில் காமெடி சேர்க்கலாம் என்று நான் சொன்னபோதும், இயக்குநர் ‘கதைக்கு இவ்வளவு போதும்’ என்று கட்டுப்படுத்தினார். இது குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

கதாநாயகி விஜயலட்சுமி கூறியது:
 
“நான் அதிக படங்களில் நடிப்பதில்லை. காரணம், கேரக்டர் நன்றாக இருந்தாலும் கதை சரியில்லையென்றால் படம் வெற்றி பெறாது, ரோலும் வீணாகிவிடும். அதனால், முழு கதையை கேட்டு, அது மக்களை ஈர்க்கும் என்று உறுதியானால் மட்டுமே ஒப்புக்கொள்வேன். ‘மிடில் கிளாஸ்’ கதை என்னை உடனடியாக ஈர்த்தது – அதனால் சம்மதித்தேன்.”

தயாரிப்பாளர் கே.வி. துரை:
 
“இந்தக் கதையை மறைந்த டில்லி பாபு சார் கேட்டு, பிடித்துப்போக தயாரிக்க ஒப்புக்கொண்டார். அவர் எப்போதும் சரியான படங்களைத் தேர்வு செய்வார் – அந்த வகையில் ‘மிடில் கிளாஸ்’ அனைவருக்கும் பிடிக்கும் குடும்ப எண்டர்டெயினர்.”

இந்தப் படம் மிடில் கிளாஸ் குடும்பங்களின் உணர்வுகளைத் தொட்டு, கலகலப்பும் திருப்பங்களும் நிறைந்ததாக உருவாகியுள்ளது – நவம்பர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. 

Tags: middle class

Share via: