பெப்ஸி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்சம் நன்கொடை
23 Mar 2020
கொரானோ வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெப்ஸி தலைவரான ஆர்.கே. செல்வமணி, பெப்ஸி உறுப்பினர்களாக உள்ள 25 ஆயிரம் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் தினமும் வேலைக்குச் சென்றால்தான் வாழ்க்கை நடத்தும் சூழலில் உள்ளனர். அவர்களுக்கு உதவ திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
உடனடியாக நடிகர் சூர்யா குடும்பத்தினர் 10 லட்ச ரூபாயை பெப்ஸிக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்தனர். திரையுலகில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் முதலில் நிதியுதவி தருவது சூர்யா குடும்பமாக இருக்கிறது. சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் செய்யும் உதவிகளால் மக்களிடையேயும் நன்மதிப்பைப் பெற்று வருகின்றனர்.
சூர்யா, கார்த்தியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இது பற்றி இன்னும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில் இவர்கள் உடனடியாக நன்கொடை அறிவித்து பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவியுள்ளனர்.
மற்ற நடிகர்களும் இவர்களைப் போல உதவ முன்வர வேண்டும் என திரையுலகத்தில் எதிர்பார்க்கின்றனர்.
Tags: fefsi, suriya, karthi, sivakumar, corono