பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’

23 Oct 2025

பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி”  (Fauzi) ,எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘ஃபௌசி’ என்றால் அரேபிய மொழியில் வெற்றி பெற்றவர் என்று அர்த்தம்.

அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு,  பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக  உருவாகிறது இந்தப் படம்.

“ஃபௌசி” (Fauzi) எனும் தலைப்பே ஒரு சிப்பாயாக பிராபாஸின் பாத்திரத்தையும், வீரத்தையும் அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது.   உறுதியான, அழகிய வடிவமைப்பில் இருக்கும் தலைப்பு டிசைன்,  வீரத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின் கொடியும், அதைச் சுற்றியுள்ள தீக்கதிர்களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் நினைவூட்டுகின்றன.

போஸ்டரில் பின்னணியில் காணப்படும் சமஸ்கிருத சுலோகங்கள் மற்றும் குறியீட்டு வடிவங்கள், இந்தக் கதையில் உள்ள புராண மற்றும் வரலாற்று அடுக்குகளைக் குறிக்கின்றன. குறிப்பாக மகாபாரதத்தில் கர்ணன் பற்றிய குறிப்புகள், விசித்திரமான விதியை எதிர்கொள்ளும் நாயகனின் பாத்திரத்தை வலியுறுத்துகின்றன.

அந்த சுலோகங்கள் அவர் பார்த்தா (அர்ஜுனன்) போல பத்மவ்யூஹத்தை வென்றவர், கர்ணன் போல வீரத்துடன் இருந்தாலும் பாண்டவர்களின் பக்கத்தில் நிற்பவர், ஏகலைவன் போல குருவின்றி பிறந்த இயற்கை வீரன் எனக் கூறுகின்றன. அவர் ஒரு பிராமணனின் ஞானத்தையும், ஒரு சத்திரியனின் தர்மத்தையும் இணைத்து நிற்பவர் — இதுவே நாயக கதாப்பாத்திரத்தின் உண்மையான குணம்.

பிரபாஸ் குளோசப் ஷாட்டில்,  கடும் உறுதியான பாவனையில் வீரத்தை வெளிப்படுத்துகிறார். அவரது கண்களில் தெரியும் தீவிரம், கூர்மையான மீசையுடன் கூடிய தோற்றம், தன்னுடைய கடமைக்காக உயிர் அர்ப்பணிக்கும் வீரனின் உருவத்தை எடுத்துக்காட்டுகிறது. “A Battalion Who Walks Alone” எனும் டேக்லைன், ஒரு தேசத்தின் போராட்டத்தை தனியாக சுமக்கும் வீரனின் தனிமையும், அதே சமயம் அவனது உறுதியையும் பிரதிபலிக்கிறது.

“ஃபௌசி”  போஸ்டர் எதிர்பார்ப்பைத் தாண்டி, ஒரு மாபெரும் திரை அனுபவத்திற்கான ஆவலைத் தூண்டுகிறது. உணர்ச்சியும் பிரமாண்டமும் கலந்த ஹனு ராகவபுடியின் தனித்துவமான பாணியில், இந்த படம் பிரபாஸை இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கவுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமன்வி நடிக்கிறார். மேலும் மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர்,  ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

நவீன் எர்நேனி மற்றும் Y. ரவி சங்கர் தயாரிப்பில் உருவாகும் “ஃபௌசி” , திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டுள்ளது – ஒளிப்பதிவை சுதீப் சட்டர்ஜீ செய்கிறார்.விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அநில் விலாஸ் ஜாதவ் புரடக்சன் டிசைன் பணிகளை கவனிக்க, கோதகிரி வெங்கடேஸ்வரராவ் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

அதிரடி போஸ்டருடன், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஃபௌசி”, ஒரு சாதாரண பான்-இந்தியா படம் அல்ல, பிரபாஸின் சினிமாப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கவுள்ள  காவியம்!

ஃபௌசி திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் வங்காள மொழிகளில் வெளியாகவுள்ளது.

Tags: fauzi, prabhas

Share via: