பூமர் அங்கிள் - விமர்சனம்

30 Mar 2024

எம்எஸ் ஸ்வதேஷ் இயக்கத்தில், சாந்தன், தர்மபிரகாஷ் இசையமைப்பில், யோகி பாபு, ஓவியா, பாலா, தங்கதுரை, சேஷு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

வெளிநாட்டுப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டவர் யோகிபாபு. ஆனால், மனைவியை விவாகரத்து செய்ய நினைக்கிறார். விவாகரத்து தருகிறேன், அதற்கு பதிலாக யோகிபாபுவுக்கு சொந்தமான அரண்மனை போன்ற வீட்டில் சில நாட்கள் இருக்க வேண்டும் எனச் சொல்கிறார் அந்த வெளிநாட்டுப் பெண். அதற்கு சம்மதித்து அந்த அரண்மனைக்குச் செல்கிறார்கள். அந்த அரண்மனையின் மாடி பகுதிக்கு மட்டும் போகக் கூடாது என்று சொல்கிறார் யோகிபாபு. அவரது சிறு வயது நண்பர்களான பாலா, தங்கதுரை, சேஷு, ஊர் தலைவர் ரோபோ சங்கர் ஆகியோரும் அவரை பழைய பகை காரணமாக பழி வாங்க அந்த அரண்மனைக்குள் நுழைகிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளில் வருகிறார் யோகிபாபு. அதன்பின் நீண்ட நேரம் காணாமல் போகிறார். மீண்டும் வருகிறார், போகிறார். காமெடி என்று எதையாவது பேசுகிறார், ஆனால், சிரிப்புதான் வரவில்லை. அவரைப் போலவே பாலா, தங்கதுரை, சேஷு ஆகியோரும் பேசிப் பேசியே நம் பொறுமையை சோதிக்கிறார்கள். ஒரு நல்ல காமெடி ரைட்டரைக் கூப்பிட்டு இப்படத்தில் பணி புரிய வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.

படத்தில் ஏதாவது ஒரு அட்ராக்ஷன் இருக்க வேண்டும் என ஓவியாவை நடிக்க வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

விஞ்ஞானியான யோகிபாபுவின் அப்பா அந்த அரண்மனையில் சில ரகசியங்களை வைத்திருக்கிறார். அந்த ரகசியங்கள் என்ன அதைக் கண்டுபிடிக்கத்தான் வெளிநாட்டுப் பெண் யோகியை திருமணம் செய்து கொண்டார் என போகப் போக என்னென்னவோ சொல்லிக் கொண்டே போகிறார்கள். ‘மார்வெல்’ கதாபாத்திரங்களை வைத்து காமெடி என்ற பெயரில் கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ஒரு படம் என்றால் ஒரு நல்ல கதை, விறுவிறுப்பான, பரபரப்பான திரைக்கதை என இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அப்படி எதுவுமே இல்லாமல் காட்சி, காட்சிகளாக என்னென்னமோ எடுத்திருக்கிறார்கள். திடீரென ஒரு கதாபாத்திரம் வருகிறது, போகிறது.

கதையின் நாயகன் யோகி பாபுவும் திடீரென காணாமல் போகிறார். அதன்பின் அவரது முகத்தைக் காட்டாமல் ‘டூப்’ வைத்து எடுத்தும் காட்சிகளை ஒப்பேற்றியிருக்கிறார் இயக்குனர். நகைச்சுவைப் படம் என்பது போல தோற்றத்தைத் தந்து எந்த இடத்திலும் சிரிக்க வைக்காமல் ஏமாற்றியிருக்கிறார்கள்.

Tags: boomer uncle

Share via:

Movies Released On July 27