‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் சிம்ரன்
12 Dec 2020
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். ‘பொன்மகள் வந்தாள்' படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இப்படத்தை இயக்கவுள்ளார். இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார்.
தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 'அந்தாதூன்' படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் சிம்ரன், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘அந்தாதூன்' ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறித்து சிம்ரன் கூறுகையில்,
"இந்திய சினிமாவில் ஒரு மைல் கல் திரைப்படம் 'அந்தாதூன்'. பல்வேறு பகுதி மக்களைச் சென்று சேர்ந்தது. தபு அவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. துணிச்சலான, அதே நேரம் சவாலான கதாபாத்திரம். இந்தப் படத்தின் மூலம் மீண்டும் பிரசாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சமீபத்தில் நான் பார்த்த படங்களில் ‘பொன்மகள் வந்தாள்’ மிகவும் அற்புதமாக இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் பிரெட்ரிக் உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாயிருக்கிறேன். படம் முழுவதும் வரும் இந்தக் கதாபாத்திரம் எனது மகுடத்தில் இன்னொரு மாணிக்கமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்கிறார்.
இதர கதாபாத்திரங்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Tags: fredrick, prashanth, simran, andhadhun