’கொட்டுக்காளி’ வெளியீடு குறித்து பேச்சு: சர்ச்சையில் சிக்கிய அமீர்
29 Aug 2024
‘கொட்டுக்காளி’ படத்தினை திரையரங்கில் வெளியிட்டது குறித்து பேசி, சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமீர்
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் திரைப்பட விழாக்களில்பல விருதுகளை பெற்றுள்ளது. ஆனால், தமிழக திரையரங்குகளில் இந்தப் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனிடையே, ‘கொட்டுக்காளி’ படத்தினை திரையரங்கில் வெளியிட்டது குறித்து இயக்குநர் அமீர், “’கொட்டுக்காளி’ படத்தினை நான் தயாரித்திருந்தேன் என்றால் திரையரங்கில் வெளியிட்டிருக்க மாட்டேன். வணிக நோக்கத்தில் வெளியிட்டு திணிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.
அந்தப் படம் சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறது. அந்த கண்ணியத்தை அப்படியே கொடுத்திருக்க வேண்டும். அதன் தயாரிப்பாளர் பிரபல நடிகராக இருக்கிறார். தனது பெயரினை வைத்து ஓடிடி தளத்தில் விற்றிருக்கலாம். அதோடு அந்தப் படத்தினை முடித்திருந்தால், தேவைப்படுபவர்கள் ‘கொட்டுக்காளி’ படத்தினை ஓடிடியில் பார்த்திருக்கலாம்” என்று பேசியுள்ளார்.
இந்தப் பேச்சு இணையத்தில் கடும் விவாத்தினை உண்டாக்கியது. பலரும் அமீரை கடுமையாக சாடினார்கள். இப்படி நினைத்திருந்தால் பல்வேறு புதிய முயற்சிகள் வெற்றி பெற்றிருக்காது என வர்த்தக நிபுணர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அமீரின் இந்தப் பேச்சு குறித்து ‘மாவீரன்’ தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது எக்ஸ் தளத்தில் “ஒரு திரைப்படத்தை எந்த தேதியில் வெளியிட வேண்டும், அதை எவ்வாறு விளம்பரம் செய்ய வேண்டும் என்பது அந்த தயாரிப்பாளரின் உரிமை! அந்த திரைப்படத்தை ஆதரிப்பதும் நிராகரிப்பதும் மக்களின் உரிமை! இந்த படம் தான் திரையரங்கில் வர வேண்டும்,இந்த படம் வர கூடாது! இந்த படத்துக்கூட எதுக்கு வரணும்? பெரிய படம் கூட சின்ன படம் வருவது தவறு/வன்முறை என்று சொல்லும் இயக்குனர் அமீர் சார் அவர்களின் பேச்சில்தான் உச்சபட்ச வன்முறை உள்ளது.
“சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ஒரு படத்தை எதுக்கு இங்க theatre la release பண்ணனும்??” நம்ம audience சர்வதேச தரத்துல இல்லனு சொல்றீங்களா அமீர் சார்??. தமிழ் சினிமாவில் ஒரு ஆகப்பெரும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நீங்கள்! சிறிய படங்களை தயாரித்தும் உள்ளீர்கள்! கொட்டுக்காளி போன்ற ஒரு சிறிய படம் release ஆகி 4 நாள் தான் ஆச்சு நீங்க இப்படி பேசினா அதோட விளைவு என்ன,அந்த இயக்குனர் & team அ பாதிக்க வாய்ப்பு இருக்கா இல்லயானு உங்களுக்கு தெரியாதா?
“பெரிய படம் கூட சின்ன படம் வரலாமா? வாழை கூட கொட்டுக்காளி திரையரங்குல விட்டது வன்முறை! GOAT படத்தோட #vaazhai vantha Nalla Irukkuma?” பிரிவினைவாதத்தை எதிர்த்து தொடர்ந்து மேடைகளில் குரல் குடுக்கும் உங்களை போன்ற ஒருவரிடமிருந்து, அனைவரும் சமம்னு சமூகநீதி பேசும் உங்களை போன்ற ஒரு இயக்குனரிடமிருந்து இதை எதிர்பாக்கல அமீர் சார்! #Kottukkaali” என்று தெரிவித்துள்ளார்.
அமீரின் பேச்சு குறித்து ‘மேற்கு தொடர்ச்சி மலை’ இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தளத்தில் “திரையரங்கிற்கு இப்படியான படங்களை மட்டும்தான் கொண்டு வரவேண்டும்.. இந்த இந்தப் படங்களோடு இந்த இந்தப் படம்தான் வெளியாகவேண்டும் என்று அண்ணன் அமீர் அவர்கள் வெறும் பொருளாதார, வெகுஜனப் பார்வையைக் கொண்டு வரையறுப்பது படைப்புலகம் மீது செலுத்தும் வன்முறையாகும்.. #அமீர் #கொட்டுக்காளி #வாழை” என்று பதிவிட்டுள்ளார்.
Tags: kottukali, ameer