7 புதிய படங்களை நேரடியாக வெளியிடும் அமேசான் பிரைம்
15 May 2020
கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டன.
புதிய திரைப்படங்களைப் பார்த்து பழகிப் போன சினிமா ரசிகர்களுக்குப் புதிய படங்களை பார்க்காத ஒரு நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக ஓடிடி தளங்கள் தியேட்டர்களில் வெளிவருவதற்கு முன்பாகவே புதிய படங்களை தங்களது தளங்களில் வெளியிட திட்டமிட்டன.
அதன்பலனாக ஓடிடி தளத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் பிரைம் நிறுவனம் 7 புதிய படங்களை நேரடியாக தங்களது தளத்தில் முதல் முறையாக வெளியிட உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர்களில் அப்படங்கள் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகின்றன.
அந்த 7 படங்களில் தமிழ்ப் படமான ‘பொன்மகள் வந்தாள்’ படம் முதல் வெளியீடாக திரையிடப்பட உள்ளது. மற்றுமொரு தமிழ்ப் படமான ‘பெண்குயின்’ ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ளது.
7 படங்களைப் பற்றிய சிறு விவரம்...
பொன்மகள் வந்தாள் - (தமிழ்), மே 29 முதல்
ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் சட்டம் சார்ந்த படமாகும். ஜே.ஜே. ஃபிரெட்ரிக் இப்படத்தை இயக்கியுள்ளார், சூர்யா தயாரித்துள்ளார்.
Gulabo Sitabo (இந்தி) - ஜூன் 12 முதல்
அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நடித்துள்ள இப்படம், சாதாரண மனிதர்களின் அன்றாட போராட்டங்களை சித்தரிக்கும் ஒரு குடும்ப நகைச்சுவை திரைப்படமாகும். இந்த படத்தை ஜூஜி சதுர்வேதி எழுதியுள்ளார், ஷூஜித் சிர்கார் இயக்கியுள்ளார். ரோனி லஹிரி மற்றும் ஷீல்குமார் ஆகியோர் இதை தயாரித்துள்ளனர்.
பெண்குயின் (தமிழ் மற்றும் தெலுங்கு) - ஜூன் 19 முதல்
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்தை ஈஷ்வர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளனர்.
Law (கன்னடம்) - ஜூன் 26 முதல்
ராகினி சந்திரன், சிரி பிரஹ்லாத் மற்றும் மூத்த நடிகர் முகமந்திரி சந்திரு ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ரகு சமர்த் எழுதி இயக்கியுள்ளார். அஸ்வினி மற்றும் புனீத் ராஜ்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
French Biryani (கன்னடம்) - ஜூலை 24 முதல்
டேனிஷ் சைட், சால் யூசுப் மற்றும் பிடோபாஷ் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை எழுதியவர் அவினாஷ் பலேக்கலா, இயக்கியவர் பன்னக பரணா. அஸ்வினி மற்றும் புனேத் ராஜ்குமார் மற்றும் குருதத் A தல்வார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
Shakuntala Devi (இந்தி) - வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
வித்யா பாலன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் பிரபலமாக அறியப்பட்ட எழுத்தாளரும் கணிதவியலாளருமான சகுந்தலா தேவியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படமாகும். இப்படத்தை நயனிகா மஹ்தானி மற்றும் அனு மேனன் ஆகியோர் எழுத அனுமேனன் இயக்கியுள்ளார். அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா தயாரித்துள்ளனர்.
Sufiyum Sujathayum (மலையாளம்) - வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்
அதிதி ராவ் ஹைடாரி மற்றும் ஜெயசூருயா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை நாரனிபுழா ஷானவாஸ் எழுதி இயக்கியுள்ளார். விஜய் பாபுவின் ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்த புதிய வெளியீடுகள் பற்றி அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் இந்திய இயக்குனர் கௌரவ் காந்தி, ”இந்தியாவில் 4000 மாநகரங்கள், நகரங்கள் மற்றும் 200 நாடுகளில் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் இந்தப் படங்களை அதிகமான மக்கள் பார்க்க முடியும். இந்த புதிய வெளியீடுகள் மூலம் எங்களது சந்தாதாரர்களை மகிழ்விப்போம் என்று நம்புகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
Tags: amazon prime, ponmagal vandhal, penguin