அஜயந்தே ரண்டம் மோஷனம் - மலையாளத்திலிருந்து ஒரு பான் இந்தியா படம்
11 Oct 2022
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’.
இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதையைச் சொல்லும் இப்படத்தில் மணியன், அஜயன், குஞ்சிகேலு என மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்க உள்ளார். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதுகிறார்.
பான் இந்தியா திரைப்படமாக 3டியில் பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
கிர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கிர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இது. பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
யுஜிஎம் புரொடக்ஷன்ஸ், மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கேரளாவின் களரி எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இப்படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால், நடிகர் டோவினோ பிரத்யேகமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
Tags: Ajayante Randam Moshanam, tovino thomas, krithi shetty, aishwarya rajesh, surabhi