அதர்வா நட்புக்காக நடிக்கும் ‘அட்ரஸ்’
23 Jun 2021
காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்க, ராஜமோகன் இயக்கி வரும் படம் ‘அட்ரஸ்’.
‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்’ படங்களுக்குப் பிறகு ராஜமோகன் இயக்கி வரும் படம் இது.
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான ‘காளி’ என்கிற இளைஞன் வேடத்தில் அதர்வா நட்புக்காக நடித்துக் கொடுத்துள்ளார்.
முக்கிய கேரக்டரான இதை கேட்டவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் அதர்வா. படத்தில் இவருக்கு ஒரு காதல் பாடல் காட்சியும், இரண்டு ஸ்டண்ட் காட்சிகளும், புரட்சிகரமான பல காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம். இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார்.
மேலும், படத்தில் இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
‘மெரீனா’, ‘மூக்குத்திஅம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்துள்ள கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு, மலையும், மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து நடந்து சென்று வெள்ளக்கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் முதல் பார்வை, டீசர் ஆகியவை வெளியாகி உள்ளன.
Tags: atharva, address, rajamohan