விருத்தாச்சலம் - விமர்சனம்

08 Apr 2017
சிறிய பட்ஜெட் படங்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவை. சில படங்கள் நல்ல கதையம்சத்துடன் வெளிவரும். சில படங்கள் முற்றிலும் புதுமுகங்களுடன் வரும். எப்படியிருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவிட்டால் அந்த சிறிய படங்களும் பின்னர் பெரிய படங்களாக மாறிவிடும். ‘விருத்தாச்சலம்’ படத்தைப் பொறுத்தவரையில் சிறிய பட்ஜெட் படம்தான் என்றாலும் பொருத்தமான நட்சத்திரங்களுடன், தெளிவான கதையுடன் வந்துள்ள படம் என்றுதான் சொல்ல வேண்டும். விருதகிரி சிறு வயதிலிருந்தே தன்னுடைய முறைப் பெண்ணான ஸ்வேதா மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். முறைப் பெண்ணை வம்புக்கிழுத்த ஒரு பையனின் கையை வெட்டியதால் சிறு வயதிலேயே சிறை சென்றவர். அந்த விவகாரத்தால் முறைப் பெண்ணை அவருடைய அம்மா ஊரை விட்டே கூட்டிச் சென்று விடுகிறார். சிறை தண்டனை முடிந்து ஊருக்கு வரும் விருதகிரி தன்னுடைய முறைப் பெண் மீதான காதலுடனே இருக்கிறார். விருதகிரியால் கையை இழந்த சம்பத்ராம், அவரைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே, அதே ஊருக்கு டீச்சராக வருகிறார் ஸ்வேதா. விருதகிரியின் நல்ல மனதைப் புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், ஸ்வேதாதான் தன்னுடைய முறைப் பெண் என்பது விருதகிரிக்குத் தெரியாது. இந்த விஷயம் சம்பத்ராமுக்குத் தெரிய வரும் போது அவர் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் விருதகிரி பொருத்தமாகவே நடித்திருக்கிறார். எப்போதும் குடித்துக் கொண்டும், கோபத்துடனும் இருப்பதால் அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றிவிடுகிறார். கிராமத்து டீச்சராக ஸ்வேதா, மாமன் என்று தெரிந்தும் தள்ளியே நின்று காதலிக்கிறார். கிராமத்து ஹீரோயின்களுக்கு உரிய லட்சணத்துடன் குடும்பப் பாங்காக இருக்கிறார். ஸ்வேதாவின் தோழியாக ஷெரீன் தாஹா, விருதகிரியைக் காதலிக்கும் மற்றொரு பெண்ணாக சமீரா, வில்லனாக சம்பத்ராம் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். எத்தனை முறை மாமன் கதைகள் வந்தாலும் தமிழ் சினிமா அனைத்தையும் தாங்கிக் கொண்டுதானிருக்கும்.

Share via: